தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7 லட்சம் மோசடி

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7 லட்சம் மோசடி

Update: 2023-09-06 19:15 GMT

கோவை

பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தனியார் நிறுவன ஊழியர்

கோவை கணபதி வெங்கடாஜலபதி நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 31). தனியார் நிறுவன ஊழியர். கடந்த மாதம் 17-ந் தேதி இவரது டெலிகிராம் செயலி மூலமாக ஒரு தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை வாங்கி தருவதகாவும், ஓட்டல் மதிப்பாய்வு மற்றும் மதிப்பீட்டை (ரேட்டிங்) கொடுத்தால் கமிஷன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை உண்மை என்று நம்பிய அசோக் குமார் அதில் குறிப்பிட்டவாறு ஓட்டல் மதிப்பீட்டுக்கான பணியை ஆன்லைனில் செய்து முடித்தார். இதற்காக அவருக்கு 3 மடங்கு கமிஷனாக ரூ.11 ஆயிரம் கிடைத்தது.

ரூ.7 லட்சம் மோசடி

இதனால் மகிழ்ச்சியடைந்த அவர் அடுத்து கொடுக்கப்பட்ட பணிக்கு டீலக்ஸ் டாஸ்க் என்ற பெயரில் ஆன்லைன் முதலீட்டில் பணம் செலுத்தினால் இதுபோன்று கமிஷன் கிடைக்கும் என்று அவருக்கு பிரிஷா ஷெட்டி என்ற பெயரில் ஒருவர் தகவல் அனுப்பி உள்ளார். இதையடுத்து அசோக்குமார் சிறிது சிறிதாக ரூ.7 லட்சத்து 66-ஐ ஆன்லைன் முதலீட்டில் செலுத்தினார்.

ஆனால் அவருக்கு கமிஷன் தொகையும், செலுத்திய பணமும் திரும்ப வழங்கப்படவில்லை. இவரிடம் டெலிகிராம் செயலி மூலமாக பேசி வந்த பிரிஷா ஷெட்டி என்பவரை தொடர்புகொள்ள முயன்றாா். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் தன்னிடம் பகுதி நேர வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அருண் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்