ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் மோசடி

ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் மோசடி

Update: 2022-07-30 15:06 GMT


ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த போலி ஐ.பி.எஸ். அதிகாரியின் கூட்டாளி கைது செய்யப்பட்டார்.

ஓட்டல் உரிமையாளர்

சென்னை சவுகார்பேட்டை நன்னியன் தெருவை சேர்ந்தவர் முகேஷ் குமார் புரோகித் (வயது 48). ஓட்டல் உரிமையாளர். இவர் சென்னை மற்றும் கோவையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு சென்னையில் ராஜ்குரு (39) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் தன்னை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி என்று கூறிக் கொண்டார்.

அவர், முகேஷ் குமார் புரோகித்திடம் ஓட்டல் தொழில் தொடர்பாக உதவி தேவை என்றால் தன்னிடம் கேட்குமாறு கூறினார். அதோடு அவர், கோவை புரூக் பாண்டு ரோடு வணிக வளாகத்தில் ஹுக்கா (போதை புகை) நடத்த அனுமதி பெற்று தருவதாக கூறியுள்ளார்.

ரூ.6 லட்சம் மோசடி

இதற்காக முகேஷ்குமார் புரோகித், ராஜ்குருவிடம் ரூ.6 லட்சம் வழங்கி உள்ளார். ஆனால் அவர் கூறியபடி எந்த அனுமதியும் பெற்று தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் முகேஷ் குமார் புரோகித், ராஜ்குருவை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போன் சுவிட்ச்-ஆப் என்று வந்தது. ராஜ்குரு போலி ஐ.பி.எஸ். அதிகாரி என்பதும், ரூ.6 லட்சத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் ராஜ்குரு மற்றும் அவருடைய கூட்டாளியான ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த கட்டாரியா ஸ்ரீதர் குமார் (31) ஆகியோர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண லீலா, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ஆந்திராவில் பதுங்கி இருந்த கட்டாரியா ஸ்ரீதர்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

போலீசார் தீவிரம்

கட்டாரியா ஸ்ரீதர்குமார் பல்வேறு வங்கி கணக்கில் பணம் வாங்கி இருப்பதாக தெரிகிறது. ராஜ்குருவின் மோசடிக்கு வியூகம் அமைப்பது, பணத்தை வாங்குவது போன்ற பணிகளை செய்து வந்துள்ளார். இவரும் பல்வேறு பெயர்களில் மோசடி செய்ததாக தெரிகிறது.

ராஜ்குருவும் வேறு பெயரில் மோசடி செய்து உள்ளதாக தெரிகிறது. ராஜ்குரு வடமாநிலங்களில் பதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்