சேலத்தில் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.59 ஆயிரம் மோசடி
சேலத்தில் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.59 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.
சேலம்,
சேலம் உடையப்பசெட்டியார் காலனியை சேர்ந்தவர் பாலாஜி. இவரின் மனைவி கவுதமி (வயது 28). இவரின் செல்போன் எண்ணுக்கு கடந்த 19-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், உங்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பரிசு விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பின்னர் தொடர்ந்து பேசிய அந்த நபர், பரிசு தொகையை பெற சேவை கட்டணம், ஜி.எஸ்.டி.போன்றவை செலுத்த வேண்டும் எனக்கூறி வங்கி கணக்கு எண்ணை அனுப்பி பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய கவுதமி, ரூ.58 ஆயிரத்து 982-ஐ சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தினார். அதன்பிறகு தான் மோசடி நடந்திருப்பதை அவர் உணர்ந்தார். இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரிசு விழுந்ததாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.