பகுதி நேர வேலை தருவதாக 2 பேரிடம் ரூ.5½ லட்சம் மோசடி

ஆம்பூர், வாணியம்பாடியில் பகுதி நேர வேலை தருவதாகக்கூறி 2 பேரிடம் ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் மோசடி செய்த நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-29 18:57 GMT

பகுதி நேர வேலை

ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் சையத் சிஹாகத்துல்லாஹ். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த மாதம் 9-ந் தேதி பகுதி நேர வேலை உள்ளதாகவும், அதன் மூலம் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் வந்துள்ளது. இதேபோல் வாணியம்பாடியை சேர்ந்த தினேஷ்பாபு (வயது 29) என்பவருக்கும் கடந்த மாதம் 16-ந் தேதி பகுதி நேர வேலை உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதனை நம்பிய 2 பேரும் குறுந்தகவலில் இருந்த லிங்கில் சென்று தங்கள் சுயவிவரங்கள், வங்கி கணக்குகளை கொடுத்துள்ளனர். அதன்பின் அவர்களின் செல்போன்களுக்கு டாஸ்க் வந்துள்ளது. அதில் இந்தியாவில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் தரங்கள் குறித்து ஸ்டார் மதிப்பெண்கள் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொடுத்தால் ரூ.100 முதல் ரூ.150 வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

மோசடி

அந்த டாஸ்கின்படி 2 பேரும் மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர். அதன்பிறகு சமூக வலைதளம் மூலம் ஒரு லிங்கை அனுப்பி அதில் உள்ள வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தினால் கூடுதலாக பணம் தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பிய இருவரும் பணம் செலுத்தி உள்ளனர். அதில் சையத் சிஹாகத்துல்லாஹ் ரூ.2 லட்சத்து 70 ஆயிரமும், தினேஷ்பாபு ரூ.2 லட்சத்து 69 ஆயிரமும் செலுத்தி உள்ளனர். ஆனால் கூடுதல் பணம் வரவில்லை. இதுகுறித்து 2 பேரும் அந்த நபர்களிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அந்த நபர்கள் இன்னும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த 2 பேரும் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்