பகுதி நேர வேலை எனக்கூறி ஸ்டூடியோ உரிமையாளரிடம் ரூ.3¼ லட்சம் மோசடி
பகுதி நேர ஆன்லைன் வேலை எனக்கூறி ராமநாதபுரம் ஸ்டூடியோ உரிமையாளரிடம் ரூ.3¼ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பகுதி நேர ஆன்லைன் வேலை எனக்கூறி ராமநாதபுரம் ஸ்டூடியோ உரிமையாளரிடம் ரூ.3¼ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பகுதி நேர வேலையில் பணம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள செங்கற்படை பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 31). போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரின் செல்போன் எண்ணில் டெலிகிராம் செயலியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செல்போனில் பகுதி நேர வேலை மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனை கண்ட தினேஷ்குமார் அந்த எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். பகுதி நேர வேலையில் அவர்கள் கொடுக்கும் பணியை ஆன்லைனில் செய்தால் அதற்கான தொகை உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் என்று கூறினர்.
அதன்படி அவர்கள் அளித்த பணியை செய்தபோது அதற்கான தொகை உடனடியாக வந்துள்ளது. இதனை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் தொடர்ந்து அதில் கவனம் செலுத்தி சம்பாதிக்கலாம் என்று நினைத்துள்ளார். இதற்காக அவர்களின் அடுத்தடுத்த பணியை செய்தபோது தொடர்ந்து பணம் வந்துள்ளது. அந்த பணத்தினை கண்ட தினேஷ்குமார் அடுத்தடுத்த பணிகளையும் செய்து கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அடுத்த பணியை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்றும் அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என கூறினர்.
சந்தேகம்
அதனை நம்பிய தினேஷ்குமார் அந்தபணத்தையும் செலுத்தி உள்ளார். அவர் செலுத்தியதை விட அதிக பணம் கிடைத்ததால் இதுதான் நமது வாழ்க்கையின் ஆதாரம். இனி இதுதான் நமது முழுநேர வேலை என்ற முடிவுக்கு வந்துள்ளார். அவரிடம் அதிக பணியை கொடுத்து அதற்கான தொகையை செலுத்துமாறு கூறினர். நமக்குதான் சரியாக பணம் வருகிறதே என்று நம்பிய தினேஷ்குமார் அதிகம் சம்பாதிக்கும் ஆசையில் அதிக பணியை செய்வதற்காக மொத்தம் ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 468 பணத்தினை தனது வங்கி கணக்கில் இருந்து அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்த பணம் சென்றதும் அதற்கான கமிசன் கிடைக்கும் என்று நம்பிய நிலையில் எதுவும் கிடைக்காததால் தினேஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
புகார்
இதுகுறித்து கேட்டபோது இன்னும் அதிக பணம் செலுத்துமாறு கேட்டு பணம் கேட்பதிலேயே குறியாக இருந்துள்ளனர். தன்னை ஆசை காட்டி மோசம் செய்கிறார்களோ என்று கலங்கிய தினேஷ்குமார் இதுகுறித்து இணையதளத்தில் தேடிப்பார்த்தபோது மேற்படி நபர்கள் போலி என்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் தன்னிடம் பகுதி நேர வேலை என்று ஆசை வார்த்தை கூறி ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 468-ஐ மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தருமாறு சைபர்கிரைம் பிரிவில் புகார் செய்தார். இதன்படி ராமநாதபுரம் சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.