நாகர்கோவில்:
கடலூர் மாவட்டம் பனையாந்தூர் பகுதியை சேர்ந்தவர் ஞான சவுந்தரி (வயது 44). இவர் நேற்று நாகர்கோவில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
கருத்து வேறுபாடு காரணமாக கடந்து 20 ஆண்டுகளாக எனது கணவரை பிரிந்து வசித்து வருகிறேன். நான் ரெயில்வே காண்டிராக்ட் மூலம் வேலைக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பணிக்கு அனுப்பி வருகிறேன். அப்போது நாகர்கோவில் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் எனக்கு அறிமுகமானார். நான் கணவனை இழந்து வாழ்ந்து வரும் விவரம் அவருக்கு தெரிந்தும், என்னிடம் நெருங்கி பழகி வந்தார். பின்னர் அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.
இதனால் நாங்கள் இருவரும் வடசேரி பகுதியில் வாழ்ந்து வந்தோம். அப்போது அவர் சொந்தமாக வீடு கட்டுவது உள்ளிட்ட பல காரணங்களை கூறி என்னிடம் இருந்து மொத்தம் ரூ.20 லட்சத்தை வாங்கினார். பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு என்னை ஒதுக்கி வந்தார். தொடர்ந்து அவரைப் பற்றி விசாரித்த போது அவர் என்னைப்போல பல பெண்களை திருமண ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. எனவே அந்த பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.