வெள்ளரிக்காய் கொள்முதலில்பால் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் மோசடி
வெள்ளரிக்காய் கொள்முதல் செய்ததில் பால் வியாபாரிக்கு கொடுக்க வேண்டிய ரூ.2 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பால் வியாபாரி
விழுப்புரம் அருகே உள்ள பூவரசங்குப்பம் ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் பழனிவேல் மகன் அசோக் (வயது 30), பால் வியாபாரி. இவர் விழுப்புரம் அருகே பிடாகம் அத்தியூரில் உள்ள தனது மாமியார் மங்கவரத்தாள் என்பவருக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் வெள்ளரிக்காய் பயிரிட்டுள்ளார்.
இதில் விளைச்சலான வெள்ளரிக்காய்களை கண்டாச்சிபுரம் தாலுகா மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த இருசப்பன் மகன் பிரபு (37) என்பவருக்கு 1.1.2022 முதல் 31.3.2022-க்குள் ரூ.4 லட்சத்துக்கு அசோக் விற்பனை செய்தார்.
ரூ.2 லட்சம் மோசடி
இதனிடையே அசோக், பிரபுவிடம் வாங்கிய வெள்ளரி விதை, உரம், மருந்து ஆகியவற்றுக்கான செலவு ரூ.2 லட்சம்போக மீதமுள்ள ரூ.2 லட்சத்தை பிரபு கொடுக்க வேண்டும். ஆனால் பணத்தை கொடுக்காமல் பிரபு அசோக்கை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அசோக், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பிரபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.