தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி

கோவையில் நிலம் வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-11-14 18:45 GMT

கோவையில் நிலம் வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நிலம் விற்பனை

அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 39). தனியார் நிறுவன ஊழியர். இவர், கோவை பீளமேடு நேருநகரில் நிலம் வாங்கி வீடு கட்ட திட்டமிட்டார்.

இதற்காக பீளமேட்டில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனத்தை அணுகினார். அதன் உரிமையாளர் ஜெகநாத் (37) நேருநகரில் நிலம் விற்பனைக்கு இருப்பதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து கார்த்திகேயன் அந்த நிலத்தை நேரில் பார்த்து வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தார்.

பின்னர் அவர், நிலத்தை வாங்கி தருவதற்காக ஜெகநாத்திடம் ரூ.15 லட்சம் கொடுத்து உள்ளார்.

அந்த பணத்தை பெற்றுக்கொண்ட ஜெகநாத் நிலத்தை வாங்கி பத்திர பதிவு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது.

வழக்கு பதிவு

எனவே கார்த்திகேயன் பல முறை கேட்டும் ஜெகநாத் பணத்தை திருப்பி கொடுக்க வில்லை என்று தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் கட்டுமான நிறுவன உரிமையாளர் ஜெகநாத் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை ராமநாதபுரம் ஒண்டிப்புதூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரிடம் ரூ.30 லட்சம் நில மோசடி வழக்கில் ஜெகநாத் கடந்த 8-ந் தேதி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனவே அவர் இது போல் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்திருக் கலாம் என்று தெரிகிறது. அது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்