போலி பணிஆணை தயாரித்து 57 இளைஞர்களிடம் ரூ.1 கோடி மோசடி
ராணுவத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி 57 இளைஞர்களிடம் ரூ.1 கோடி மோசடி செய்த முன்னாள் ராணுவவீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராணுவத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி 57 இளைஞர்களிடம் ரூ.1 கோடி மோசடி செய்த முன்னாள் ராணுவவீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலைவாங்கி தருவதாக...
வேலூர் அரியூரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 51). முன்னாள் ராணுவவீரர். அணைக்கட்டு அருகே மருதவள்ளிபாளையம்பகுதியை சேர்ந்தவர் பாபு. மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களிடம் ராணுவத்தில் வேலைவாங்கி தருவதாக தெரிவித்தனர். அதன்பேரில் ஏராளமான இளைஞர்கள் பணம் கொடுக்க முன்வந்தனர்.
அவர்களை ஏமாற்றி இருவரும் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை மோசடி செய்தனர். இவர்களுக்கு ஆட்களை பிடித்து கொடுக்கும் தரகராக திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த சம்பத்குமார் (61) என்பவர் செயல்பட்டுள்ளார். இவர் தனது கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம் பணத்தை பெற்று மூர்த்தி, பாபுவிடம் கொடுத்துள்ளார்.
போலி பணிநியமன ஆணை
ஒருகட்டத்தில் பணம் கொடுத்தவர்கள் வேலை கேட்டுள்ளனர். இதையடுத்து 3 பேரும் சேர்ந்து மராட்டிய மாநிலத்தில் இருந்து அனுப்பியது போன்று போலியான பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளனர்.
பணி ஆணை வழங்கிய பின்னரும் அவர்களை அழைத்துச் சென்று வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த இளைஞர்கள் இதுகுறித்து விசாரித்தபோது தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
2 பேர் கைது
அதைத்தொடர்ந்து அவர்கள் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, தலைமை காவலர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், 3 பேரும் சேர்ந்து சுமார் 57 பேரிடம் ராணுவத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடியே 22 லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. அதன்பேரில் மூர்த்தி, சம்பத்குமாரை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாபுவை தேடி வருகின்றனர்.