திருக்கோலநாதர் கோவிலில் ஆடிப்படையல் விழா

திருக்கோலநாதர் கோவிலில் ஆடிப்படையல் விழாவில் மாட்டு வண்டிகளில் சென்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

Update: 2023-07-28 19:15 GMT

சிங்கம்புணரி, 

திருக்கோலநாதர் கோவிலில் ஆடிப்படையல் விழாவில் மாட்டு வண்டிகளில் சென்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

மாட்டு வண்டியில் பயணம்

திருப்பத்தூர் அருகே திருக்கோலக்குடி கிராமத்தில் திருக்கோலநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி படையல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மாட்டு வண்டிகளில் பாரம்பரிய முறைப்படி சென்று வழிபாடு நடத்தினர்.

6 தலைமுறைக்கு மேல் மக்கள் தொடர்ந்து இது போன்ற வழிபாட்டு முறைகளை அவர்கள் கடைபிடித்து வருவதாக கூறினார்கள். மணப்பட்டி, சிவபுரிபட்டி, வேங்கைப்பட்டி, சிங்கம்புணரி கீழத்தெரு மக்கள் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஒன்றிணைந்து மணப்பட்டி கிராமத்திலிருந்து மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டனர்.

சைவ உணவு

நேற்று முன்தினம் 21 மாட்டு வண்டிகள் பூட்டப்பட்டு முதல் வண்டியாக மணப்பட்டி ராஜா கோனார் வண்டியில் கோவில் மாட்டை பூட்டி செல்ல தொடர்ந்து ஒவ்வொரு கிராமத்தார்கள் வண்டிகளில் குடும்பம் குடும்பமாக ஒன்றிணைந்து நள்ளிரவு 12 மணிக்கு பயணத்தை தொடங்கினார்கள்.

மருதிபட்டி, தெக்கூர், துவார், செவ்வூர் வழியாக திருக்கோலக்குடி கோவிலுக்கு நேற்று அதிகாலை சென்றடைந்தனர். நேற்று பிற்பகல் மலையில் அமைந்துள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் 50-க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு அசைவ உணவு தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடி படையல் விழா பிற்பகலில் நடைபெற்று அனைவருக்கும் அசைவ உணவு பரிமாறப்பட்டது. விழா முடிந்து மீண்டும் மாட்டு வண்டி பூட்டிக்கொண்டு பக்தர்கள் ஊர் திரும்புவார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்