சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

வைகாசி விசாக தேரோட்ட விழாவை முன்னிட்டு சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.

Update: 2023-05-05 20:52 GMT

வைகாசி விசாக தேரோட்ட விழாவை முன்னிட்டு சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.

கோட்டை பெருமாள் கோவில்

சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான தேரோட்ட விழா அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று காலை கோட்டை பெருமாள் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

இதையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் சுதர்சன பட்டாச்சாரியார் தலைமையில் கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் சுதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சாமி புறப்பாடு

விழாவை முன்னிட்டு வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சாமி புறப்பாடு, மதியம் 12 மணிக்கு கொடியேற்றம், மாலை 6 மணிக்கு அன்ன வாகனத்தில் சாமி திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. 27-ந் தேதி காலை 8 மணிக்கு வெள்ளி பல்லக்கிலும், மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்திலும் சாமி திருவீதி உலா நடைபெறுகிறது. 30-ந் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு சாமி திருக்கல்யாண உற்சவம், மாலை 6 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடக்கிறது.

31-ந் தேதி மாலை 6 மணிக்கு யானை வாகனத்தில் சாமி வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 3-ந் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 5.45 மணிக்கு சாமியை கோவிலில் இருந்து தேருக்கு எடுத்து செல்லுதல், தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4-ந் தேதி காலை 9 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், 5-ந் தேதி இரவு 7 மணிக்கு சத்தாபரணமும், 6-ந் தேதி மாலை 6 மணிக்கு வசந்த உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்