பாசன தண்ணீர் குழாய்கள் துண்டிப்பை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்; பி.ஆர்.பாண்டியன் உள்பட 175 விவசாயிகள் கைது

சின்னமனூரில் விவசாய பணிக்கான தண்ணீர் குழாய்கள் துண்டிப்புக்கு கண்டனம் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்பட 175 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-18 16:38 GMT

சின்னமனூரில் விவசாய பணிக்கான தண்ணீர் குழாய்கள் துண்டிப்புக்கு கண்டனம் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்பட 175 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

குழாய்கள் துண்டிப்பு

தேனி மாவட்டம் சின்னமனூர் முல்லைப்பெரியாறு பகுதியில் விவசாயிகள் பட்டா நிலங்களில் கிணறு அமைத்து, அதில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை குழாய் மூலம் பூமிக்கு அடியில் பதித்து சின்னமனூரை ஒட்டியுள்ள ஓடைப்பட்டி வெள்ளையம்மாள்புரம், தென்பழனி, சீப்பாலக்கோட்டை, எரசக்கநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசனத்திற்காக கொண்டு செல்கின்றனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட தண்ணீர் மூலம் வாழை, திராட்சை, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் விவசாயிகள் அனுமதியின்றி தண்ணீர் கொண்டு செல்வதாக கூறி சின்னமனூரில் இருந்த சுமார் 50 தண்ணீர் குழாய்களை துண்டித்தனர். இதனால் வாழை, திராட்சை உள்ளிட்ட பயிர்கள் வாடும் நிலை உள்ளதாக விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

இதற்கிடையே தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று சின்னமனூருக்கு வந்தார். அப்போது தண்ணீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து அவர் பேசினார். மேலும் தண்ணீர் இன்றி வாடிவரும் விவசாய பயிர்களை நேரில் சென்று பி.ஆர்.பாண்டியன் பார்வையிட்டார். அதேபோல் தண்ணீர் குழாய்கள் துண்டிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த சின்னமனூர் போலீசார், விவசாயிகளிடம் கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறினர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சாலை மறியல்

இதையடுத்து தண்ணீர் குழாய்கள் துண்டிப்பை கண்டித்தும், உடனடியாக குழாய் இணைப்பை வழங்க வலியுறுத்தியும் சின்னமனூர்-உத்தமபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து விவசாயிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இந்த சாலை மறியலால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டியன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் குமணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மறியல் போராட்டத்தை கைவிடுகிறோம். அதே நேரத்தில் எந்த அடிப்படையில் விவசாய பணிக்காக கொண்டு செல்லப்பட்ட குழாய்களை துண்டிப்பு செய்தார்கள் என்பதனை அதிகாரிகள் விளக்க வேண்டும். மேலும் அதற்கான உத்தரவு நகலையும் எங்களிடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் சாலை ஓரம் உள்ள தனியார் இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

175 பேர் கைது

இதையடுத்து ஆர்.டி.ஓ., நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஆகியோர் விவசாயிகளிடம், குழாய்கள் துண்டிப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்தனர். ஆனால் விளக்கம் என்பது கண் துடைப்பு போல் உள்ளது என்று கூறி பி.ஆர்.பாண்டியன் அதிகாரிகளிடம் பேசாமல் எழுந்து சென்றார். அதேபோல் அங்கிருந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பி.ஆர்.பாண்டியன் பின்னால் தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக சென்றனர். இதனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விவசாயிகள், ஆலோசனை கூட்டம் நடத்துவதற்காக திருமண மண்டபத்துக்கு செல்கிறோம் என்று கூறினர். ஆனால் இதனை ஏற்காத போலீசார், பி.ஆர்.பாண்டியன் உள்பட 175 விவசாயிகளை கைது செய்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதற்கிடையே பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், விவசாய பணிக்காக கொண்டு செல்லப்பட்ட குழாய்களை அதிகாரிகள் யாரோ ஒருவரை திருப்திபடுத்துவதற்காக துண்டிப்பு செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கதக்கது. நவம்பர் 1-ந்தேதி சின்னமனூரில் இருந்து விவசாயிகள் குடும்பத்தோடு ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்