குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா

குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா

Update: 2023-06-16 13:55 GMT

தளி,

குறைதீர்க்கும் கூட்டத்தில் ெகாடுக்கப்படும் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

தர்ணா

உடுமலை உட்கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ அலுலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் துரை தலைமை வகித்தார். அதைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. அப்போது நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விவசாயிகளிடம் அதிகாரிகள் சமாதானம் பேசி இருக்கையில் அமர வைத்தனர். அதைத் தொடர்ந்து நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் தெரிவித்தார்கள். பின்னர் கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளை குறித்து விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-

மண் கடத்தல்

உடுமலை பகுதியில் கனிம வளங்கள் கேரளாவுக்கு உடுமலை-மூணாறு சாலை வழியாக மண் கடத்தப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தி கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுக்க வேண்டும். சில நாட்களாக வேட்டை நாய்கள் தாக்குதலால் ஏராளமான ஆடு, மாடு உள்ளிட்டவை பலியாகி உள்ளது. இதனால் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெதப்பம்பட்டியில் சந்தை நடைபெறுகிற போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு போலீசாரை நியமித்து அதை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமராவதி சர்க்கரை ஆலை

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை எந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்து சரியாக இயங்குவதில்லை. இதனால் வயலில் கரும்புகள் தேங்கி வருகிறது. மேலும் முற்றிய கரும்புகள் அறுவடை செய்யாமல் வெய்யிலில் காய்வதால் எடையிழப்பு ஏற்படுகிறது. எனவே. நிர்வாக குளறுபடிகளை களைந்து சீரான முறையில் சர்க்கரை ஆலையை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜம்புக்கல் மலை பகுதியில் அசல் ஆவணங்கள் இல்லாமல் பத்திரப்பதிவு நடைபெற்று உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள உடுமலை மனமகிழ் மன்றத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை வார்டில் டாக்டர்கள் இருப்பதில்லை.

இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள்.

இதில் உடுமலை ஆர். டி.ஓ. நேர்முக உதவியாளர் ஜலஜா, தாசில்தார்கள் கண்ணாமணி (உடுமலை), செல்வி (மடத்துக்குளம்), சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விவேகானந்தன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்