குப்பைகளை கொட்டி ஆறு, குளங்களை பாழாக்கும் உள்ளாட்சி அமைப்புகள்; விவசாயிகள் சரமாரி புகார்
ஆறு-குளங்களில் உள்ளாட்சி அமைப்புகள் குப்பைகளை கொட்டி பாழாக்கி வருவதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் கூறப்பட்டது.
ஆறு-குளங்களில் உள்ளாட்சி அமைப்புகள் குப்பைகளை கொட்டி பாழாக்கி வருவதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் கூறப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வேளாண்மை இணை இயக்குனர் அனுசுயா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் காந்திநாதன், பொதுப்பணித்துறை பொறியாளர் கோபி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ரவிச்சந்திரன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். இதற்கு அதிகாரிகள் பதில் அளித்தனர். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
நல்லசாமி:- ஒரு ஏக்கருக்கு 290 கிலோ கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. இது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே ஏக்கருக்கு 600 கிலோ கொள்முதல் செய்ய வேண்டும். பரப்பலாற்றில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
பொதுப்பணித்துறை பொறியாளர்:- விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.
மாரிமுத்து:- சாணார்பட்டி பகுதியில் ஓடைகளில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் விளைப்பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை.
கலெக்டர்:- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர்நிலைகளில் குப்பைகள்
முத்துசாமி:- பாடியூர் பகுதியில் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இறப்பு சான்றிதழ் மிகவும் தாமதமாக வழங்கப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தாசில்தார் மூலம் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்.
மாவட்ட வருவாய் அலுவலர்:- பிறப்பு, இறப்பு சான்றிதழ் உரிய காலத்தில் வழங்கப்படுகிறது. அதேநேரம் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களுக்கு தற்போது இறப்பு சான்றிதழ் கேட்பதால், உரிய ஆவணங்களை பெற்று விசாரித்து தான் வழங்கப்படும். அதில் சிக்கல்கள் இருந்தால் தாமதம் ஆகிவிடுகிறது. எனினும் ஆர்.டி.ஓ.க்கள் வாரந்தோறும் இறப்பு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராமசாமி:- திண்டுக்கல்லை அடுத்த அழகுபட்டி பகுதியில் அடுத்தடுத்து 21 மாடுகள் மர்மமாக இறந்தன. கறவை மாடுகளை இழந்தவர்கள் வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர். எனவே மாடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பழனி தட்டான்குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாயை சீரமைக்க வேண்டும். நிலக்கோட்டை அன்னசமுத்திரம் குளத்துக்கு தண்ணீர் வருவதற்கு கால்வாய் அமைக்க வேண்டும்.
மாவட்ட வருவாய் அலுவலர்:- கால்வாய் அமைப்பதற்கு நிலம் எடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாடுகள் இறப்பு
கலெக்டர்:- அழகுபட்டியில் மாடுகள் இறந்தது தொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறையினர் கணக்கெடுக்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள கோழிப்பண்ணையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகள் நோயில் இறந்து இருந்தால் இழப்பீடு வழங்க இயலாது. அதேநேரம் கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து மாடுகள் வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமசாமி:- குடகனாறு வல்லுனர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் சேகரிக்கும் குப்பைகளை குளம், ஆறுகளில் கொட்டி செல்கின்றனர். இதனால் நீர்நிலைகள் பாழாகி வருகின்றன. இதுபற்றி மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் விவசாயிகள் புகார் அளித்துள்ளோம். எனினும் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. எனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
பொன்குமரேசன்:- குடகனாற்றில் கடைசி விவசாய பகுதியான ஆர்.வெள்ளோட்டில் பாசன ஆயக்கட்டு அமைக்க வேண்டும்.
செல்வராஜ்:- கூவனூத்து பகுதியில் காட்டெருமைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. அதேபோல் தோட்ட கம்பி வேலி, தார்ப்பாய் ஆகியவற்றையும் சேதம் செய்கின்றன. அதற்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.