பி.ஏ.பி.விவசாயிகள் முற்றுகை போராட்டம்

பி.ஏ.பி.விவசாயிகள் முற்றுகை போராட்டம்

Update: 2022-09-08 13:04 GMT

காங்கயம்,

காங்கயம் அருகே சட்டப்படியான தண்ணீர் வழங்க கோரி பி.ஏ.பி. பாசன விவசாயிகள் வாய்க்கால் மதகு பகுதியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதகு பகுதியில் முற்றுகை

திருமூர்த்தி அணையிலிருந்து 2-ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு கடைமடை பகுதிகளை வந்தடைந்துள்ளது. பி.ஏ.பி பாசன சட்ட விதிகளின் படி சுற்று ஒன்றுக்கு 7 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது 5 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிளை கால்வாய்களுக்கு திறக்கப்பட்டு, 2 நாட்கள் வழங்கப்படாமல் அடைக்கப்படுகிறது. இதனால் பாசன நிலங்களுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காங்கயம் பழைய கோட்டை சாலை, வாய்க்கால்மேடு பகுதியில் இருந்து தொட்டியபட்டி கிளை கால்வாய்க்கு திறந்து விடப்பட்ட நீரை, 7 நாட்கள் வழங்காமல் 2 நாட்கள் முன்னதாகவே அடைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்தனர். 7 நாட்கள் வழங்க ஆணை உள்ள நிலையில் 2 நாட்கள் முன்னதாகவே தண்ணீர் அடைப்பதை தடுத்து நிறுத்த வெள்ளகோவில் கிளைக் கால்வாய் பாசன விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் அங்கு குவிந்து மதகு பகுதியில் முற்றுகையிட்டு காத்திருந்தனர்.

பேச்சுவார்த்தை

இதனை தொடர்ந்து அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை மதகை அடைக்க விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வந்த காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், தாசில்தார் புவனேஸ்வரி ஆகியோர் விவசாயிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் விவசாயிகள் பி.ஏ.பி. சட்ட விதிகளின்படி 7 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என தங்கள் கருத்தை வலியுறுத்தி கூறினர். விவசாயிகள், வாய்க்கால் மதகு பகுதியில் முற்றுகையிட்டு போரட்டம் நடத்தியதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகை அடைக்க முடியாமல் திரும்பி சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்