முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் தம்பி கைது - சொத்து தகராறில் மருமகனை வைத்து கொன்றது அம்பலம்

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் தம்பி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-14 07:37 GMT

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் டாக்டர் மஸ்தான் (வயது 66). முன்னாள் எம்.பி.யான இவர் தி.மு.க.வில் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளராகவும், சிறுபான்மை வாரிய துணைத்தலைவராகவும் இருந்தார்.

இவர் கடந்த மாதம் 22-ந்தேதி இரவு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரது தம்பி மருமகன் இம்ரான் பாஷா ஓட்டிச்செல்லும் போது திடீரென மார்பு வலி, வலிப்பு ஏற்பட்டு கூடுவாஞ்சேரியில் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மஸ்தானின் மகன் ஹரிஷ் ஷாநவாஸ், தனது தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்ததில் காரில் செல்லும்போது மஸ்தானின் மூக்கை அழுத்தி கொலை செய்தது அம்பலமானது.

இந்த கொலை வழக்கில் மஸ்தானின் கார் டிரைவரும் தம்பி மருமகனுமான இம்ரான் பாஷா, இவரது சித்தி மகன் தமீம் என்கிற சுல்தான், நண்பர்கள் தவுபிக் அகமது, நசீர், லோகேஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து போலீசார் இம்ரான் பாஷாவின் தொலைபேசி அழைப்புக்களை தணிக்கை செய்து பார்த்த போது டாக்டர் மஸ்தானை கொலை செய்வதற்கு முன்னும் பின்னும் இம்ரான் பாஷா தன்னுடைய செல்போனில் இருந்து தன்னுடைய மாமனார் கவுசே ஆதாம்பாஷாவுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்ட மஸ்தானுக்கும் அவருடைய தம்பி கவுசே ஆதாம்பாஷாவுக்கும் அவர்களுடைய குடும்ப சொத்தான வீடு சம்பந்தமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு மஸ்தான் தனது தம்பி கவுசே ஆதாம்பாஷாவின் ஆஸ்பத்திரிக்கு சென்று சத்தம் போட்டது விசாரணையில் தெரிந்ததால், கொலை செய்யப்பட்ட மஸ்தானின் தம்பி கவுசே ஆதாம்பாஷாவிற்கு கொலையில் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் பாஷா, தமீம் நஷீர், தவுபிக் அகமது ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டது.

இம்ரான் பாஷாவிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட மஸ்தான், அவரது தம்பியும் இம்ரான் பாஷாவின் மாமனாருமான கவுசே ஆதாம்பாஷாவிற்கு கொடுத்த கடன் ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்ததாலும், அவர்களது குடும்ப சொத்தான வீட்டை தனது மாமனாருக்கு எழுதி கொடுக்க தடையாக இருந்ததாலும், தனது மாமனாருடன் சேர்ந்து மஸ்தானை கொலை செய்ய திட்டம் போட்டது தெரியவந்தது. அதன்படி மஸ்தானுடன் நெருங்கி பழகி அவரை வெளியே காரில் அழைத்து சென்று தனது உறவினர் தமீம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் சென்னை செங்குன்றம் பகுதியில் வசித்து வரும் மஸ்தானின் தப்பி கவுசே ஆதாம்பாஷாவை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலத்தை பதிவு செய்த போலீசார் கவுசே ஆதாம்பாஷாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்