திருச்சியில் ஓடும் பஸ்சில் முன்னாள் எம்.எல்.ஏ. மருமகளிடம் நகை பறிப்பு
திருச்சியில் ஓடும் பஸ்சில் முன்னாள் எம்.எல்.ஏ. மருமகளிடம் நகை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி திருவானைக்காவல் மேல விபூதி பிரகாரத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது தந்தை ராஜகோபால். இவர் காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. இந்தநிலையில் திருநாவுக்கரசுவின் மனைவி ஞானாம்பாள் (வயது 72) திருவானைக்காவலில் இருந்து டவுன் பஸ்சில் சத்திரம் பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து ஜங்ஷன் செல்லும் பஸ்சில் ஏறி உறையூரில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக உறையூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. ஓடும் பஸ்சில் தங்க சங்கிலியை மர்ம ஆசாமி பறித்து சென்றுவிட்டான். இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.