தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனு தள்ளுபடி

தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2023-06-09 21:24 GMT

சென்னை,

தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தி.மு.க. சார்பில் பழனியப்பன் என்று பலர் போட்டியிட்டனர்.

இதில், விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் ஆகியவற்றை அதிகளவில் வினியோகித்து முறைகேடாக விஜயபாஸ்கர் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவி்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், தனக்கு எதிராக பழனியப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஐகோர்ட்டில் விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனியப்பன் தரப்பில் வக்கீல் ரிச்சர்ட்சன் வில்சன் ஆஜராகி, தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் உள்ளதால், வழக்கை நிராகரிக்க கோரிய விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயபாஸ்கர் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை நிராகரிக்க கோரிய விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தேர்தல் வழக்கு விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்