கடலூர் பஸ் நிலையத்தை குறிஞ்சிப்பாடி தொகுதியில் அமைக்க விட மாட்டோம் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு

கடலூர் பஸ் நிலையத்தை குறிஞ்சிப்பாடி தொகுதியில் அமைக்க விட மாட்டோம் என கடலூரில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

Update: 2023-10-06 18:45 GMT

கடலூர் பஸ் நிலையத்தை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி எம்.புதூரில் அமைக்க முடிவு செய்துள்ள தி.மு.க. அரசை கண்டித்தும், கடலூர் மாநகராட்சியில் நிலவிவரும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக சீர் செய்திட வலியுறுத்தியும் கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி. சம்பத் தலைமை தாங்கினார்.

மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், ஒன்றிய செயலாளர் காசிநாதன், ஒன்றியக்குழு தலைவர் தெய்வ.பக்கிரி, பகுதி செயலாளர்கள் எம்.பாலகிருஷ்ணன், கந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட அவைத்தலைவர் சேவல்குமார் வரவேற்றார்.

யாரும் ஏற்றுக்கொள்ளாத திட்டம்

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் பேசுகையில், எம்.புதூரில் கடலூர் பஸ் நிலையம் அமைப்பதை எந்த ஒரு அமைப்பினரும், வியாபாரிகளும், பொதுநல இயக்கத்தினரும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களின் எதிர்ப்பை மீறி கடலூர் பஸ் நிலையத்தை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் அமைக்க விட மாட்டோம். 90 சதவீத மக்கள் ஏற்றுக்கொள்ளாத திட்டத்தை அமைச்சர் திணிக்கிறார். எம்.புதூரில் கடலூர் பஸ் நிலையம் அமைந்தால் கடலூர் மக்கள் பஸ் நிலையத்திற்காக சுமார் 9 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

மேலும் கடலூர் மாநகராட்சி துர்நாற்றம் வீசும் மாநகராக உள்ளது. அமைச்சருக்கு பயந்து தான் மாநகராட்சி நிர்வாகமே செயல்படுகிறது. கஞ்சா உலகமான கடலூர் மாவட்டத்தில் எம்.புதூரில் பஸ் நிலையம் அமைந்தால் மாநகராட்சியும் வளராது, வியாபாரம் பாதிக்கப்படும்.

வள்ளலார் பெயருக்கு வரவேற்பு

வள்ளலார் பெயரை பஸ் நிலையத்திற்கு வைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். எனவே எம்.புதூரில் பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு, அங்கு ஷூ கம்பெனி அமைக்க வேண்டும். கடலூர் மாநகரின் மையப் பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரன், மீனவர் பிரிவு இணைச் செயலாளர் தங்கமணி, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் மணிமேகலை தஷ்ணா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், இலக்கிய அணி செயலாளர் ஏழுமலை, வர்த்தக பிரிவு செயலாளர் வரதராஜன், பகுதி செயலாளர் தங்க.வினோத்ராஜ், மாநகராட்சி கவுன்சிலர் தஷ்ணா, மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், மருத்துவ அணி செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி தமிழ்செல்வன், பாதிரிக்குப்பம் ஊராட்சி மன்ற துணை தலைவர் லட்சுமி ராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பகுதி செயலாளர்கள் மாதவன், வெங்கட்ராமன் ஆகியோர் நன்றி கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்