கள்ளக்காதலி வெட்டிக்கொலை; ஆடு மேய்க்கும் தொழிலாளி கைது

தா.பழூர் அருகே கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற ஆடு மேய்க்கும் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-13 19:28 GMT

கள்ளக்காதல்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மேலகுடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). இவர் மலேசியாவில் தோட்ட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா (35). இவர்களுக்கு சரவணவேல் (13), சந்தோஷ் (9) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த தேவேந்திரன் மகன் ஆனஸ்ட்ராஜ் (26). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவருக்கு கீதாஞ்சலி என்கிற மனைவியும் 1 வயதில் மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் ஆனஸ்ட்ராஜுவுடன் சத்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதையடுத்து, அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சத்யாவின் நகைகளை ஆனஸ்ட்ராஜ் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.

குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டல்

இதையடுத்து, சத்யா தனது நகைகளை மீட்டு தருமாறு ஆனஸ்ட்ராஜிடம் அடிக்கடி கேட்டுள்ளார். மேலும், கீதாஞ்சலி மற்றும் குழந்தையை விட்டுவிட்டு தன்னோடு வாழும்படி சத்யா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். மேலும், தன்னோடு சேர்ந்து வாழ மறுத்தால் உனது குழந்தையை கொன்று விடுவேன் என்று சத்யா மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆனஸ்ட்ராஜ் சத்யாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி நேற்று காலை 11 மணியளவில் சத்யா வீட்டிற்கு சென்று அவரோடு பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது ஆனஸ்ட்ராஜிடம் சத்யா தன்னுடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்தியுள்ளார்.

வெட்டிக்கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த ஆனஸ்ட்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சத்யாவின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே நிலை குலைந்து விழுந்தார். சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து ஆனஸ்ட்ராஜ் தென்கச்சிபெருமாள் நத்தம் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்குமாரிடம் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளுடன் சென்று சரணடைந்தார்.

கைது

இதனைதொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்குமார் தா.பழூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் (பொறுப்பு) தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனஸ்ட்ராஜை கைது செய்தனர். மேலும், அவர் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் சத்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் 2 மகன்களின் தாய் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்