28 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

வீடுகளுக்குள் புகுந்து சேட்டை செய்த 28 குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்.

Update: 2022-08-09 15:49 GMT

கொடைக்கானல் அப்சர்வேட்டரி சாலை செம்மண்மேடு பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இவை அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து துணிகள் மற்றும் பொருட்களை எடுத்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளன. நாளுக்கு நாள் இந்த குரங்குகளின் சேட்டைகள் அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து நகராட்சி கவுன்சிலர் ஜெயசுந்தர் மூலம், வனத்துறையினரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து உதவி வனப்பாதுகாவலர் சக்திவேல், வனச்சரகர் சிவகுமார் ஆகியோர் உத்தரவின் பேரில், வனவர் அழகுராஜா மற்றும் வனத்துறையினர் அங்கு வந்து 2 கூண்டுகள் வைத்தனர். அந்த கூண்டுகளுக்குள், குரங்குகளுக்கு பிடித்தமான உணவுகளை வைத்தனர். இதனை பார்த்த குரங்குகள் உணவுகள் சாப்பிடுவதற்காக ஆர்வமாக உள்ளே சென்றதும் கூண்டுக்குள் சிக்கி கொண்டன.

அதன்படி நேற்று மாலை வரை 2 கூண்டுகளிலும் மொத்தம் 28 குரங்குகள் சிக்கின. அந்த குரங்குகளை, பேரிஜம் வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். இதேபோல் அப்பகுதியில் உலா வரும் காட்டெருமைகள், காட்டுப்பன்றிகளை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்