குன்னூர்
குன்னூர் அருகே பேரட்டி கிராமத்துக்கு செல்லும் சாலையோரம் உள்ள வனப்பகுதியில் நேற்று காலை 9.20 மணியளவில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதன் அருகே ராணுவ குடியிருப்புகள் உள்ளது. இதனால் தீ பரவியது குறித்து குன்னூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் 2 வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ராணுவ தீயணைப்பு பிரிவின் ஒரு வாகனமும் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. மேலும் பேரட்டி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நீண்ட நேரம் போராடி மதியம் 12.30 மணியளவில் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்து குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.