குன்றி வனச்சாலை வழியாக இரவு நேரங்களில் செல்வதை தவிர்க்க- வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை வேண்டும்
குன்றி வனச்சாலை வழியாக இரவு நேரங்களில் செல்வதை தவிர்க்க- வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை வேண்டும்
டி.என்.பாளையம்
கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் காணப்படுகின்றன. இவை பல நேரங்களில் கடம்பூர், குன்றி உள்ளிட்ட கிராமம் வழியாக செல்லும் வனச்சாலையை கடந்து சென்று வருகின்றன. குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் யானைகள் உணவுக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலைகளில் உலா வருகின்றன.
இவ்வாறு சாலையை கடக்கும் யானைகளை அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்கின்றனர்.
இதுகுறித்து கடம்பூர் வனச்சரகர் ரவிச்சந்திரன் மற்றும் வனத்துறையினர் கூறும்போது, 'இதுபோன்ற புகைப்படம் எடுக்கும் நபர்கள் மீது வனத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் யானைகள் நடமாட்டம் இருப்பதால் குன்றி வனச்சாலை வழியாக மாலை, இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்வதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.
இதைத்தொடர்ந்து குன்றி வனச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி நேற்று மாலை வனத்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.