வனத்துறை அனுமதி அளித்தது: அழகர்மலையில் இருந்து நூபுரகங்கைக்கு சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்

வனத்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து அழகர்மலையில் இருந்து நூபுரகங்கைக்கு செல்ல மலை சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது.

Update: 2023-07-07 20:02 GMT

அழகர்கோவில்

வனத்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து அழகர்மலையில் இருந்து நூபுரகங்கைக்கு செல்ல மலை சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது.

சாலை பணி நிறுத்தம்

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மலை அடிவாரத்தில் இருந்து நூபுர கங்கை மலைச்சாலையில் சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது. இதற்காக அரசு சட்டமன்ற உத்தரவுப்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தார்ச்சாலை போடுவதற்கான பணிகள் பொக்லைன் எந்திரம் மூலம் கோவில் நிர்வாகம் தொடங்கியது.

அப்போது தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் மற்றும் வேம்பரளி வனத்துறை அலுவலர்கள் உரிய அனுமதி பெறாமல் தார்சாலை ேபாடக்கூடாது என கூறி தடுத்து நிறுத்தினர். இதையொட்டி அறநிலையத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பணிகள் அன்று நிறுத்தப்பட்டது.

வனத்துறை அனுமதி

பின்னர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு கோவில் அதிகாரிகள் மறுநாள் பணியை தொடங்கினர். தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மீண்டும் பணி செய்ய விடாமல் தடுத்தனர். சம்பவ இடத்திற்கு வனத்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் வந்து அலுவலகத்தில் முகாமிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதை தொடர்ந்து இந்த கோவிலில் நவீன பிரசாதம் தயாரிக்கும் கூடத்தை திறந்து வைக்க அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு, பத்திரபதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களிடம் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இது சம்பந்தமாக வனத்துறையிடம் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்பிறகு வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று 7-ந்தேதி பணிகள் தொடங்கலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதையொட்டி நேற்று முன்தினம் உரிய அனுமதி பெற்றது.

வனத்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து அழகர்மலையில் இருந்து நூபுரகங்கைக்கு செல்ல மலை சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது.

இதை தொடர்ந்து நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் மீண்டும் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த சாலை பணிகள் ரூ.9 கோடியே 10 லட்சம் மதிப்பில் சுமார் 4 கி.மீ தொலைவில் போடப்பட்டு வருகிறது.

அப்போது மதுரை அறநிலைய துறை இணை ஆணையர் செல்லத்துரை, கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, பேரூராட்சி தலைவர் குமரன், உதவி பொறியாளர் கிருஷ்ணன், மற்றும் அறநிலையத்துறை, வனத்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி மற்றும் போலீசார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்