தொடர் மழையால் பசுமைக்கு திரும்பிய வனப்பகுதி

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தொடர் மழையால் வனப்பகுதி பசுமைக்கு திரும்பியது. காட்டுத்தீ அபாயம் நீங்கியதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்து உள்ளனர்.

Update: 2023-05-07 18:45 GMT

பொள்ளாச்சி

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தொடர் மழையால் வனப்பகுதி பசுமைக்கு திரும்பியது. காட்டுத்தீ அபாயம் நீங்கியதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்து உள்ளனர்.

வனப்பகுதியில் காட்டுத்தீ

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகளும், அரிய வகை பறவை இனங்களும், தாவரங்களும் உள்ளன.

இதற்கிடையில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகளின் காரணமாக வனப்பகுதி பசுமையாக காட்சி அளித்தது. ஆனால் கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு மழைப்பொழிவு குறைந்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரங்களின் இலைகள் உதிர்ந்து மொட்டையாக காட்சி அளித்தன. உடனே காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டன. இருப்பினும் அக்காமலை வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியது.

தொடர் மழை

இந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனப்பகுதி மீண்டும் பசுமைக்கு திரும்பி உள்ளது. இதனால் காட்டுத்தீ அபாயம் நீங்கியது. இதன் காரணமாக வனத்துறையினர் நிம்மதி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் காடுகளில் கடும் வறட்சி ஏற்பட்டதால் மரங்கள் காய்ந்தன. இதன் காரணமாக காய்ந்த சருகுகளால் தீப்பிடிப்பதை தடுக்க தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டன. மேலும் வறட்சியினால் தடுப்பணைகள் வறண்டதால், வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வனப்பகுதிகளில் ஆங்காங்கே தொட்டி வைக்கப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டன.

நிரம்பும் தடுப்பணைகள்

இதையடுத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காய்ந்த மரங்கள் துளிர்விட தொடங்கி உள்ளன. மேலும் வனப்பகுதிக்கு பசுமைக்கு திரும்பியதால் வனவிலங்குகளுக்கு தேவையான தீவனம் வனப்பகுதிகளில் கிடைக்கிறது. மேலும் தடுப்பணைகளும் நிரம்பி வருகிறது. இது தவிர காட்டுத்தீ அபாயமும் நீங்கியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்