அந்தியூரில் வனத்துறையினருக்கு யானைகள் கணக்கெடுக்கும் பயிற்சி

அந்தியூரில் வனத்துறையினருக்கு யானைகள் கணக்கெடுக்கும் பயிற்சி நடந்தது.

Update: 2023-05-15 21:01 GMT

அந்தியூரில் வனத்துறையினருக்கு யானைகள் கணக்கெடுக்கும் பயிற்சி நடந்தது.

கணக்கெடுப்பு பயிற்சி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு வனக்கோட்டத்துக்கு உள்பட்ட அந்தியூர், பர்கூர், தட்டகரை, சென்னம்பட்டி வனச்சரகங்கள் மற்றும் சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட மேட்டூர் வனச்சரகத்தில் ஆண்டுதோறும் மே மாதம் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில் நடந்தது. இதில் 70 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக உயிரியலாளர் சக்திவேல், ஈரோடு வன கோட்ட உயிரியலாளர் மணி ஆகியோர் கலந்து கொண்டு யானைகள் கணக்கெடுப்பது பற்றி பயிற்சி அளித்தனர்.

3 நாட்கள்

17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 3 நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இதில் 200 பேர் 43 குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்க உள்ளனர். முதல் நாளில் 15 கிலோ மீட்டர் சுற்றளவில் நடந்து சென்று யானைகளை கணக்கெடுக்கிறார்கள். 2-வது நாள் நேர்கோடு வரைந்து அதில் யானைகள் நடந்து செல்லும் கால்தடங்களை வைத்தும், 3-வது நாள் நீர் நிலைகளில் யானைகள் தண்ணீர் அருந்த வரும்போது நவீன தொலைநோக்கு கருவிகொண்டு கண்காணித்தும் கணக்கெடுக்க உள்ளதாக பயிற்சி அளிக்கப்பட்டது.

கணக்கெடுக்கும் பணியானது 3 நாட்களும் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்க உள்ளது. இந்த பயிற்சியில் அந்தியூர் வனச்சரகர் உத்தர சாமி, பர்கூர் வனச்சரகர் பிரகாஷ், சென்னம்பட்டி வனச்சரகர் ராஜா உள்ளிட்ட வனச்சரகர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்