அரசு செலவில் வெளிநாடு சுற்றுலா:தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவன் தேர்வு
அரசு செலவில் வெளிநாடு சுற்றுலா செல்வதற்கு தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவன் தேர்வு செய்யப்பட்டுள்ளான்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்தது. இதில் தூத்துக்குடி ஜின் பாக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் வி.அ.சஞ்சித் ஈஸ்வர் ஆங்கில செய்யுள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதனால் அவருக்கு 'கலையரசன்' விருதை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனை தொடர்ந்து மாணவன் சஞ்சித் ஈஸ்வர் தமிழக அரசு சார்பில் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டார். இவ்வாறு மாநிலம் முழுவதும் 21 மாணவர்களும், அவர்களுடன் 6 தலைமை ஆசிரியர்களும் வெளிநாடு சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் வருகிற 4-ந் தேதி மலேசியாவுக்கு செல்கின்றனர். அங்கு ஒரு வார காலம் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டு உள்ளது. இதனை தொடர்ந்து மாணவர் சஞ்சித் ஈஸ்வர் மற்றும் ஜின் பாக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லூடஸ் ராஜம் பிரீடா ஆகியோர் நேற்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
இதேபோன்று ரக்க்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு பிரம்ம குமாரிகள் அமைப்பை சேர்ந்த பெண்கள், மாநகராட்சி மேயருக்கு ராக்கி கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்தனர்.