ரூ.1.9 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.1.9 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்
செம்பட்டு:
சோதனை
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருச்சியில் இருந்து நேற்று மாலை 6.50 மணிக்கு இண்டிகோ விமானம் சிங்கப்பூர் நோக்கி புறப்படுவதற்கு தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த பயணிகளின் உடைமைகளை இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் சோதனை செய்தனர்.
3 பேர் கைது
இதில் 3 பயணிகளின் உடைமைகளில் சந்தேகப்படும்படியான பொருட்கள் இருந்ததை அறிந்து, அதனை சோதனை செய்தனர். அப்போது அந்த உடைமைகளில் கட்டு, கட்டாக வெளிநாட்டு பணம் இருந்ததை அறிந்த இண்டிகோ நிறுவன ஊழியர்கள், இது பற்றி உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு வந்து, 3 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருச்சியை சேர்ந்த முகமது சையது (வயது 34), ராஜ் முகம்மது (35), கலீல் ரகுமான் (34) என்பதும், வெளிநாட்டு பணத்தை சிங்கப்பூருக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.
ரூ.1.9 கோடி பறிமுதல்
மேலும் அவர்களிடம் இருந்து அமெரிக்க டாலர், மலேசியன் ரிங்கிட், சிங்கப்பூர் டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த பணத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 1.9 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.