மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதியுதவி

நடப்பு ஆண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

Update: 2022-07-01 15:22 GMT

நடப்பு ஆண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

பேட்டி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் உள்ளிட்ட உதவிகள் வழங்குவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை தாண்டி ரூ.21 ஆயிரத்து 200 கோடி நிதி உதவி செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடியை இலக்காக முதல்-அமைச்சர் நிர்ணயித்து உள்ளார். அதையும் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட 1 லட்சத்து 19 ஆயிரம் மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். அவர்களின் ஆலோசனையையும் கேட்டு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

சமத்துவபுரம்

இந்த ஆண்டு 145 சமத்துவபுரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலை வசதிகளை ஏற்படுத்துவது, வீடுகளை பழுது நீக்குவது போன்ற பணிகள் ரூ.190 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக கோர்ட்டு உரிய வழிகாட்டுதல்களை தெரிவித்த பிறகு பணிகள் நடைபெறும். ஜனநாயகத்தை தி.மு.க. பாதுகாக்கும்.

குடிநீர் திட்டங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 503 கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ.1,140 கோடி அளவில் புதிய குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. விரைவில் அந்த பணிகள் தொடங்கும். அதேபோன்று விருதுநகர், தூத்துக்குடி மாவட்டம் பயன்பெறும் வகையில் மற்றொரு திட்டமும் தயாரிக்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் உள்ள 403 பஞ்சாயத்துகளிலும் 5 ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு கூட்டம்

இதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் பெரியகருப்பன் தலைமை தாங்கினார். மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வரவேற்று பேசினார். ஊரக வளர்ச்சி இயக்க ஆணையர் தாரேஸ் அகமது திட்டம் குறித்து விளக்கி பேசினார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), ஊர்வசி அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் திவ்யதர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன் நன்றி கூறினார்.

முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் அமைத்திருந்த கண்காட்சியை அமைச்சர் ெ்பரியகருப்பன் பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்