கத்திரிமலையில் உள்ள பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி முகாம்; காணொலி காட்சி மூலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
கத்திரிமலையில் உள்ள பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி முகாமை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
கத்திரிமலையில் உள்ள பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி முகாமை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
சுய தொழில் பயிற்சி
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பர்கூர் ஊராட்சி கத்திரிமலையில் வசிக்கும் மலைவாழ் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக சுய தொழில் பயிற்சி முகாம் தொடக்க விழா காணொலி காட்சி மூலமாக ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கத்திரிமலை குக்கிராமத்தில் 3 சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அந்த குழு உறுப்பினர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக கூடை பின்னும் பயிற்சி காணொலி காட்சி மூலமாக வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான மூலப்பொருட்கள் மகளிர் திட்டம் மூலமாக வழங்கப்பட்டு உள்ளது. மேலும், பின்னப்பட்ட கூடைகள் மகளிர் திட்டம் மூலமாக வாங்கி விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், ஒரு தையல் எந்திரம் கத்திரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மலைவாழ் பெண்களுக்கு துணிப்பைகள் தைக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
காய்கறி தோட்டம்
ஒரு மகளிர் சுய உதவிக்குழுவுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. காய்கறி விதைகள் வழங்கப்பட்டு காய்கறி தோட்டம் அமைக்கவும், மழைநீர் சேமிக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
இந்த பயிற்சியின்போது பள்ளிக்கூட ஆசிரியர் குணசேகரன், வட்டார இயக்க மேலாளர் எல்.செல்வி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.கே.இளங்கனி, சி.சுதா, பயிற்றுனர் தனக்கொடி ஆகியோர் உடனிருந்தனர். ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் டி.கெட்சி லீமா அமலினி, உதவி திட்ட அதிகாரி சாந்தா உள்பட பலர் கலந்துகொண்டனர்.