தாலுகா அலுவலகங்களில் ஆய்வு:நலத்திட்ட உதவிகளை தகுதியானவர்களுக்குவழங்க வேண்டும்கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் உத்தரவு
தாலுகா அலுவலகங்களில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியானவர்களுக்கு உடனுக்குடன் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நாகர்கோவில்:
தாலுகா அலுவலகங்களில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியானவர்களுக்கு உடனுக்குடன் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திடீர் ஆய்வு
குமரி மாவட்ட புதிய கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் விளவங்கோடு தாலுகா அலுவலகத்துக்கு நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், நமக்கு நாமே திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், கிராம தன்னிறைவு திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்ததோடு, அனைத்து நலத்திட்ட உதவிகளும், தகுதியானவர்களுக்கு உடனுக்குடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து, கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ், நில உடமைச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட இதர நலத் திட்ட உதவி வழங்குவது குறித்து தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்ததோடு, தாலுகா அளவில் பணியாற்றும் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், உதவியாளர்கள் மற்றும் இதர வருவாய்த்துறை பணியாளர்களின் பணிகளை கண்காணிக்கவும், வேளாண்மை நிலங்களுக்கு உதவித்தொகை வழங்குவது குறித்தும் கேட்டறிந்தார்.
புதிய தாலுகா அலுவலகம்
மேலும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் விலையில்லா வேட்டி- சேலைகள் விளவங்கோடு தாலுகாவில் 28 வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 124 ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டதோடு, விளவங்கோடு புதிய தாலுகா அலுவலகம் அமைப்பது தொடர்பான பணிகள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகளிடம் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், விளவங்கோடு தாசில்தார் பத்மகுமார், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆயிஷா பீவி, வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜன், வட்ட வழங்கல் அதிகாரி ராஜசேகர், துணை தாசில்தார் விஜயலதா உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.