தமிழ்நாட்டில் முதல்முறையாக அரிய வகை நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை

தமிழ்நாட்டில் முதல் முறையாக ‘டிஸ்டோனியா' எனப்படும் அரிய வகை நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சென்னை ரேலா ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது.

Update: 2023-02-15 05:36 GMT

நாகர்கோவிலை சேர்ந்தவர் சாந்தி ஹென்றி (வயது 57). 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கழுத்து ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டது. பின்னர் அவரது வலது கை செயலற்று போனது. தொடர்ந்து அவரது உடலின் பல்வேறு உறுப்புகளும் அசைவற்ற நிலைக்கு சென்றன. இதனால் அவர் படுத்த படுக்கையானார்.

சாந்தி ஹென்றியை அவரது குடும்பத்தினர் கேரளா உள்பட பல இடங்களுக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றும் அவர் குணமாகவில்லை. இந்த நிலையில் சாந்தியை சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா ஆஸ்பத்திரிக்கு அவரது மகன் சைன் ஹென்ரி அழைத்து வந்தார்.

அங்கு நுண்துளையீட்டு நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சங்கர் பாலகிருஷ்ணன், நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு மூத்த ஆலோசகர் டாக்டர் அன்பு செல்வம், பேச்சு மற்றும் விழுங்குதல் நோயியல் மற்றும் நரம்பியல் 'பிசியோதெரபிஸ்ட்' நிபுணர் ஸ்ரீமதி நரசிம்மன் ஆகிய மருத்துவக்குழுவினர் சாந்தியின் உடல்நிலையை பரிசோதித்தனர்.

அவருக்கு 'ஸ்கேன்' மற்றும் மரபணு சோதனை நடத்தப்பட்டது. இதில் சாந்தி 'டிஸ்டோனியா' எனப்படும் அரிய வகை நரம்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நோய் உலகத்தில் லட்சத்தில் 16 பேரை மட்டுமே பாதிக்கிறது. இது மரபணு சார்ந்த நோய் ஆகும்.

'டிஸ்டோனியா' நோயால் பாதிக்கப்பட்ட சாந்தி ஹென்றிக்கு ரேலா ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதற்காக மருத்துவ குழுவினரை ரேலா ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் முகமது ரேலா பாராட்டினார்.

இந்த நோய் மற்றும் சிகிச்சை குறித்து டாக்டர் சங்கர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

'டிஸ்டோனியா' என்பது மிகவும் சிக்கலான உடல் இயக்க பிரச்சினை சார்ந்த நோயாகும். இது தசைகளை சுருங்கச் செய்கிறது. இதன் காரணமாக நரம்புகள் சுருண்டு கொள்கின்றன. இது உடலின் ஒரு பகுதி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அருகில் உள்ள உறுப்புகள் அல்லது உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கலாம்.

இயக்கத்தைக் கட்டுப்படுத்தி ஒருங்கிணைக்கும் மூளையின் ஒரு பகுதியின் அசாதாரண செயல்பாட்டின் விளைவாக இந்த நோய் ஏற்படுகிறது. இதற்கு ஆழமான மூளை தூண்டுதல் சிகிச்சையானது ஒரு பாதுகாப்பான செயல்முறையாகும். இது மூளையின் உள்ளே ஆழமாக இருக்கும் இலக்கு பகுதியில் முடி அளவு மின்முனையை பொருத்துகிறது. இந்த மின்முனையானது நரம்புகளை தூண்டும் பணிகளை செய்கிறது மற்றும் தேவையற்ற இயக்கங்களை நீக்குவதோடு நீங்கள் விரும்பும் உடல் இயக்கங்களை டியூன் செய்கிறது. இது உடற்கூறியல் கட்டமைப்புகளின் துல்லியமான அறுவை சிகிச்சை இலக்குடன் நரம்பியல் செயல்பாடுகளை மீட்டெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துகிறது.

தற்போது அறுவை சிகிச்சை முடிந்து 2 நாட்களுக்கு பிறகு நோயாளிக்கு கழுத்து பகுதியில் தசைகள் இழுப்பது வெகுவாக குறைந்து இருந்தது கண்டறியப்பட்டது. 'நியூரோஸ்டிமுலேட்டரின் புரோகிராமிங்' முடிந்ததும் சாந்தியின் வாழ்க்கை நிலை வெகுவாக மேம்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பது அரிய வகையாக உள்ளது. மருத்துவ சிகிச்சை செலவு குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் வரை ஆகும். எனவே முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தில் இந்த நோய்க்கான சிகிச்சையையும் சேர்த்தால் பாதிக்கப்பட்டவர்களை குணமடைய செய்யலாம் என்றும் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்