2-வது முறையாக அரசு டவுன் பஸ் ஜப்தி

விபத்தில் காயம் அடைந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு டவுன் பஸ் 2-வது முறையாக ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2023-08-01 18:21 GMT

விபத்தில் காயம்

குடியாத்தம் நெல்லூர் பேட்டை பாவோடும் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 31). கூலித் தொழிலாளி. குடியாத்தம் கோபாலபுரம் குல்லாரி தெருவை சேர்ந்தவர் பாலாஜி (30). இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ள பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வேலூரில் இருந்து குடியாத்தம் பஸ் நிலையத்திற்குள் நுழைந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக கார்த்தி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் கார்த்திக்கிற்கு கை உள்ளிட்ட பகுதியில் பலத்த காயமும், பாலாஜிக்கு கால் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.

இருவரும் குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த அப்போதைய குடியாத்தம் சார்பு நீதிபதி சுந்தர்ராஜ் கடந்த 2021 மார்ச் அன்று வழங்கிய தீர்ப்பில் காயமடைந்த கார்த்திக்கு ரூ.4 லட்சத்து 78 ஆயிரத்து 500-ம், பாலாஜிக்கு ஒரு லட்சத்து 16 ரூபாயும் இழப்பீடாக வழங்க போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார்.

இழப்பீடு தொகை வழங்கப்படாதால் இருவரும் வழக்கறிஞர் நிறைவேற்று மனு அளித்தனர். மனுவை விசாரித்த சார்பு நீதிபதி ஜி.பிரபாகரன், காயம் அடைந்த கார்த்திக்கு வட்டியுடன் சேர்த்து 7 லட்சத்து 61 ஆயிரத்து 544 ரூபாயும், பாலாஜிக்கு ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 926 ரூபாயும் வழங்க வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி உத்தரவிட்டார்.

ஜப்தி

இழப்பீடு பணம் வழங்கப்படாததால் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்் தேதி குடியாத்தத்தில் இருந்து காட்பாடி சென்று வரும் டவுன் பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒரு மாதத்துக்குள் இழப்பீடு தொகையை செலுத்தி விடுவதாக உறுதி அளித்ததால் பஸ் விடுவிக்கப்பட்டது.

அதன் பின்னர் பூசாரி பாலாஜிக்கு மட்டும் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. கார்த்திக்கு, 5 மாதங்கள் ஆகியும் இழப்பீடு தொகை வழங்கப்படாததால் சார்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரஞ்சித்குமார் மூலமாக கார்த்தி மீண்டும் நிறைவேற்று மனு அளித்தார். மனுவை விசாரித்த சார்பு நீதிபதி பிரபாகரன் வட்டியுடன் சேர்த்து ரூ.7 லட்சத்து 77 ஆயிரத்து 890-ஐ வழங்க குடியாத்தம் கிளை பணிமனை அதிகாரிகளுக்கு வழங்க உத்தரவிட்டார்.

இழப்பீடு வழங்காததால் இரண்டாவது முறையாக நேற்று குடியாத்தம் பஸ் நிலையத்தில் காட்பாடி செல்லும் அரசு டவுன் பஸ்சை குடியாத்தம் சார்பு நீதிமன்ற முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர்கள் தங்கராஜ், பிரேமலதா ஆகியோர் வழக்கறிஞர் ரஞ்சித் குமார், பாதிக்கப்பட்ட கார்த்தி ஆகியோருடன் ஜப்தி செய்தனர்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று மாலையில் இழப்பீட்டு தொகையில் ஒரு பகுதியாக ரூ.6 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் காசோலையை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து டவுன் பஸ் விடுவிக்கப்பட்டது.

இரண்டு முறை ஒரே வழக்குக்காக அரசு டவுன் பஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்