2-வது நாளாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி வழக்கில் 2 பேரை பிடிக்க 2-வது நாளாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
பந்தலூர்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குந்தலாடியில் டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த 26-ந் தேதி இந்த கடை அதிகாலையில் திறந்து இருந்தது. இதை அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் பார்த்து சந்தேகம் அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, கடைக்குள் 3 பேர் நின்றிருந்தனர். அவர்கள் மதுபாட்டில்களை எடுத்து சாக்குப்பையில் நிரப்பி கொண்டு இருந்ததோடு பணப்பெட்டியை உடைத்து திருடிக்கொண்டும் இருந்தனர். இதனால் போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். உடனே 3 பேரும், போலீசாரை கத்தியை காட்டி மிரட்டினர். மேலும் மதுபாட்டில்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீஸ்காரர்கள் அன்பழகன், ஷியாபுதீன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனால் தற்காப்புக்காக போலீசார், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. மேலும் 2 பேர் தப்பி ஓடினர். விசாரணையில் பந்தலூர் தாலுகா பாட்டவயல் அருகே கொட்டாடு பகுதியை சேர்ந்த மணி என்ற சாம்பார் மணி என்பதும், தப்பி ஓடியது அவரது கூட்டாளிகள் ஜிம்பிஜோஸ், குஞ்சுபாவா என்பதும் தெரியவந்தது. அவர்கள் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. அதன்பேரில் தனிப்படை போலீசார் கேரளா விரைந்து உள்ளனர். நேற்று 2-வது நாளாக ஜிம்பிஜோஸ், குஞ்சுபாவா இருவரையும் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.