2-வது நாளாக விளை நிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

குடியாத்தம் பகுதியில் 2-வது நாளாக காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2023-01-08 17:18 GMT

காட்டு யானைகள் அட்டகாசம்

ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து வரும் காட்டு யானைகள், குடியாத்தம் பகுதியில்உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த சில மாதங்களாக யானைகள் தொல்லை குறைந்திருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குடியாத்தம் அடுத்த மத்தேட்டிபல்லி கிராமத்தைச் சேர்ந்த சங்கரன் உள்ளிட்ட சிலரது நிலத்தில்புகுந்து வாழை, பப்பாளி, மாமரங்களை சேதப்படுத்தின. மீண்டும் பக்கத்து கிராமமான தனகொண்டபல்லி கிராம காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள சங்கரன் என்பவரது நிலத்தில் இரண்டாவது நாளாக புகுந்த காட்டு யானைகள் ஏராளமான வாழை, மா, பப்பாளி மரங்களையும், முள்ளங்கி பயிரையும் நாசம் செய்தன.

மாமரங்கள் சேதம்

இதேபோல் மற்றொரு யானை கூட்டம் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமம் கொண்டம்மா கோவில் பகுதியில் வெங்கடாஜலபதி என்பவரது மாந்தோப்புக்குள் புகுந்து 40-க்கும் மேற்பட்ட மாமரங்களை ஒடித்து நாசம் செய்துள்ளன.

இதுகுறித்து விவசாயிகள் உடனடியாக குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரக அலுவலர் வினோபா தலைமையில் வனவர் சதீஷ்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் சென்று கிராம மக்கள், விவசாயிகள் துணையுடன் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகளை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

யானைகள் மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்த சம்பவங்களால் விவசாயிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்