பொது இடங்களை சுகாதாரமாக பராமரித்ததற்காக ஈரோடு நேதாஜி மார்க்கெட்டுக்கு தரச்சான்றிதழ்

பொது இடங்களை சுகாதாரமாக பராமரித்ததற்காக ஈரோடு நேதாஜி மார்க்கெட்டுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2023-09-20 21:22 GMT

பொது இடங்களை சுகாதாரமாக பராமரித்ததற்காக ஈரோடு நேதாஜி மார்க்கெட்டுக்கு தரச்சான்றிதழை மத்திய அரசின் உணவு பாதுகாப்பு ஆணையம் வழங்கியது.

தரச்சான்றிதழ்

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறது. இந்த நெறிமுறைகளை பின்பற்றி பொது இடங்களை சுகாதாரமாக பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சிறப்பாக பராமரிக்கப்படும் பகுதிகளுக்கு மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தின் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இதற்கான பணியை தமிழ்நாடு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை செய்துள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி சுகாதாரமாக பராமரிப்பு செய்த சந்தைகள், கோவில்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு தரச்சான்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

அமைச்சர் வழங்கினார்

நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு தரச்சான்றுகள் வழங்கினார். ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டுக்கான சான்றிதழை தனி வணிகர்கள் சங்க தலைவர் ஆர்.கே.சண்முகவேல் பெற்றுக்கொண்டார். அப்போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் எஸ்.கே.எம்.பாலகிருஷ்ணன், மாநகர செயலாளர் கே.பாலமுருகன், பொருளாளர் ஏ.ஆர்.சாதிக் பாட்ஷா, கனி வணிகர் சங்க செயலாளர் எஸ்.சாதிக் பாட்ஷா, பொருளாளர் எம்.எம்.சி.மணி ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல் சத்தியமங்கலம் உழவர் சந்தை, ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவில், நசியனூர் மதுரகாளியம்மன் கோவில் அதிகாரிகள் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். இதேபோல் மடத்துப்பாளையம் அங்கன்வாடி மையம், நஞ்சை ஊத்துக்குளி அம்மன்நகர் அங்கன்வாடி மையம் ஆகிய மையங்களுக்கும் அமைச்சர் தரச்சான்று வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அதிகாரி தங்கவிக்னேஷ், வேளாண்மை விற்பனைக்கூட துணை இயக்குனர் மகாதேவன், நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகி ஆர்.கே.சண்முகவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்