சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு 5,800 முருங்கை மரங்கள் சேதம்
மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு 5,800-க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் சேதம் அடைந்தன.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு 5,800-க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் சேதம் அடைந்தன.
சூறைக்காற்றுடன் மழை
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த சூறைக்காற்று, மழையால் சாலை ஓரத்தில் இருந்த ஏராளமான மரங்கள் முறிந்து மின்ஒயர்களில் விழுந்தது. இதில் மின்கம்பங்கள் சேதமடைந்தன. ஆங்காங்கே மின்ஒயர்களும் அறுந்து தொங்கின. இதனால் மெஞ்ஞானபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மின்தடை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மின்ஒயர்களில் கிடந்த மரக்கிளைகளை துரிதமாக அகற்றி புதிய மின்கம்பங்களை நடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு மராமத்து பணிகள் முடிந்த பின்னர் மின்வினியோகம் செய்யப்பட்டது.
முருங்கை மரங்கள் சேதம்
மேலும், சூறைக்காற்றுக்கு மெஞ்ஞானபுரம் பகுதியில் உள்ள முருங்கை, வாழை மரங்கள் பலத்த சேதமடைந்தன. குறிப்பாக அடைக்கலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் பிள்ளைவிளை தோட்டத்தில் 8 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 800-க்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் சேதமடைந்தன.
இதேபோல் அவருக்கு சொந்தமாக கல்விளையில் உள்ள 5 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகளும் முறிந்தன.
விவசாயிகள் கவலை
மேலும் மெஞ்ஞானபுரம் அருகே மாணிக்கபுரத்தை சேர்ந்த வைகுண்டபெருமாள் என்ற விவசாயிக்கு சொந்தமான 2 ஆயிரம் வாழைகளும் நாசமானது. இதேபோன்று, பல்வேறு பகுதிகளில் விவசாயிகளின் தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த முருங்கை, வாழைகளும் முறிந்து சேதமடைந்தன.
இதனால் கவலை அடைந்த விவசாயிகள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். இதையடுத்து செம்மறிக்குளம் கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன், பாதிக்கப்பட்ட முருங்கை, வாழை மரங்களை பார்வையிட்டார்.
சாத்தான்குளம்
இதேபோல் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் சுப்பராயபுரம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட விவசாய தோட்டங்களில் பல ஏக்கரில் இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முருங்கை மரங்களும், பன்னம்பாறை பகுதியில் தென்னை மற்றும் வாழைகளும் சேதம் அடைந்தன. இவற்றை சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா பார்வையிட்டார்.