சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம்

காரைக்குடியில் நாளை முதல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-19 18:45 GMT

காரைக்குடியில் நாளை முதல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு கடன் முகாம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகமானது குறு, சிறு மற்றும் நடுத்தரதொழில் பிரிவுகளுக்கும், புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் காரைக்குடி கிளை அலுவலகத்தில் நாளை(திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படும்.

பயன்பெறலாம்

மேலும், இத்திட்டத்தின் கீழ் தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டுமானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் பயனாளிகளுக்கு முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும் மற்றும் வட்டியில் 3 சதவீதம் மானியம் சேர்த்து வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் பொதுகடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகையும் அளிக்கப்படும்.

இவ்வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகள் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்