பெருந்துறை சிப்காட் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அமைச்சாிடம் கோரிக்கை மனு
பெருந்துறை சிப்காட் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அமைச்சாிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
பெருந்துறை சிப்காட் கழிவுகளால் தொடரும் தொல்லைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினர் அமைச்சர் சு.முத்துசாமிக்கு கோரிக்கை மனு வழங்கி உள்ளனர்.
கோரிக்கை மனு
பெருந்துறை சிப்காட்டில் நிலவி வரும் அசாதரண சூழ்நிலைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.பி.ஏ. மகாலிங்கம், செயலாளர் எம்.சுந்தர் ஆகியோர் தலைமையில் சங்கத்தினர் அமைச்சர் சு.முத்துசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். இதுதொடர்பாக அவர்கள் வழங்கி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
பெருந்துறை சிப்காட்டில் 250 தொழிற்சாலைகளில் சுமார் 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். மாதம் ஒன்றுக்கு மின்கட்டணமாக மட்டும் ரூ.50 கோடி செலுத்துகிறோம். சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.100 கோடி செலுத்துகிறோம்.
நெருக்கடி
பொருளாதாரம், வேலைவாய்ப்பில் முக்கிய பங்காற்றி வரும் பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளுக்கு தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. சிப்காட் வளாகத்தில் உள்ள நல்லா ஓடையில் செல்லும் உபரி நீரால் சிப்காட்டையொட்டி உள்ள கிராம மக்களின் அதிருப்திக்கு நாங்கள் ஆளாகி, மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
நல்லா ஓடையில் 2 ஆயிரத்து 600 மீட்டர் அளவுக்கு பக்கவாட்டு சுவர் மற்றும் தரைதளம் என 3 பக்கம் காங்கிரீட் அமைக்க வேண்டும். சிப்காட்டில் தாழ்வான நிலப்பரப்பில் ஆழ்குழாய் அமைத்து நீரை உறிஞ்சி சுத்திகரிப்பு செய்து சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கே வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
ஆழ்குழாய் கிணறு
இதுதொடர்பாக சங்க தலைவர் மகாலிங்கம் கூறியதாவது:-
சிப்காட்டில் 2007-ம் ஆண்டு வரை சுத்திகரிப்பு நிலையங்கள் கிடையாது. அதுவரை அனைத்து தொழிற்சாலைகளும் கழிவுகளை சிப்காட் வளாகத்திலேயே சேமித்து வைத்தன. மழைக்காலங்களில் இந்த கழிவுகள் நிலத்தடிக்குள் சென்று விட்டது. தற்போது அனைத்து ஆலைகளிலும் மறுசுழற்சி சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தாலும், மழைக்காலங்களில் நிலத்தடி கழிவுகள் வெளியேறி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றன.
எனவேதான் ஆழ்குழாய் அமைத்து அந்த தண்ணீரை முழுமையாக எடுத்துவிட வேண்டுகிறோம். சிப்காட் நிறுவனம் எங்கள் கோரிக்கையை கண்டுகொள்வது இல்லை. எனவே அரசு சிப்காட் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.