வடமாநிலங்களில் வேலை இன்மைக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பு
வடமாநிலங்களில் ேவலை இன்மைக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பு என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
பரமக்குடி,
வடமாநிலங்களில் ேவலை இன்மைக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பு என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
உருவப்படம் திறப்பு
தியாகி இமானுவேல் பேரவையின் பொதுச்செயலாளர் பூ.சந்திரபோஸ் நினைவேந்தல் மற்றும் அவரது உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்தது.
ஐந்திணை மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு, சந்திரபோசின் உருவப்படத்தை திறந்து வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சாதி வாதத்திற்கும் மதவாதத்திற்கும் மக்கள் பாடம் புகட்டி இருக்கிறார்கள். தி.மு.க. தலைமையிலான கூட்டணி தொடர வேண்டும் என அந்த தொகுதி மக்கள் அங்கீகாரமாக தீர்ப்பு வழங்கி உள்ளனர். ஆகையால் அந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வாக்குகளை விலைக்கு வாங்கிவிட்டார்கள் என விமர்சனம் செய்கிறார்கள்.
மக்களை அவமதிக்கக்கூடாது
தி.மு.க. அல்லது காங்கிரசை விமர்சிக்கிறோம் என்ற பெயரால் வாக்களித்த மக்களை அவமதிக்கக்கூடாது. பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தவர்கள் என்று மக்களை அவமதிக்கக்கூடாது
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகமே வென்றுள்ளது.
ஆக்கிரமிப்பு
வட மாநிலத்தவர்கள் குறித்து பீகார் சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்று உள்ளது. தமிழர்களை பாதுகாக்க வேண்டும். தமிழர்களுக்கான வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் முதலீடுகள் என்ற பெயரால் வட இந்தியர்கள் தமிழகத்தில் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒப்பந்த பணி என்ற பெயரில் வட மாநிலத்தவர்களை தமிழகத்தில் ஈடுபடுத்துகிறார்கள். பெரிய மால்கள், வணிக வளாகங்கள், மிகப்பெரிய துறைமுகங்கள் போன்றவற்றிற்கு ஒப்பந்த பணிகளை வடமாநிலத்தவர்கள் எடுக்கிறார்கள். வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு முதலீட்டு வடிவில் தமிழ்நாட்டில் வருகிறது. கூலி வேலைக்கு வரும் வட மாநிலத்தவர்களை அடித்து விரட்டுவோம் என கூறுவது யாராக இருந்தாலும், உண்மையான தமிழனாக இருக்க முடியாது. வடமாநிலங்களில் வேலைவாய்ப்பு இல்லாததால் வட மாநில தொழிலாளர்கள் கூலி வேலைக்கு தமிழகம் வருகின்றனர். எனவே வேலை இன்மைக்கு பொறுப்பேற்க வேண்டியவர் பிரதமர் மோடிதான்.
இவ்வாறு அவர் கூறினார்.