பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2023-06-16 21:23 GMT

பவானி

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.

காலிங்கராயன் வாய்க்கால்

பவானி அருகே உள்ள காலிங்கராயன் தடுப்பணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் தொடங்குகிறது. அங்கிருந்து ஈரோடு மாவட்டத்தின் எல்லையில் உள்ள ஆவுடையார் பாறை என்ற இடத்தில் நொய்யல் ஆற்றில் இந்த வாய்க்கால் கலக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 15,743 ஏக்கர் விவசாய நிலங்கள் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகின்றன.

தண்ணீர் திறப்பு

இந்தநிலையில் குறுவை சாகுபடிக்காக காலிங்கராயன் வாய்க்காலில் நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்காக பவானிசாகர் அணையில் இருந்து கூடுதலாக 100 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை காலிங்கராயன் தடுப்பணையில் இருந்து பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் உதயகுமார் மதகின் பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்துவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் தினகரன், செந்தில்குமார், பவித்ரன், சபரிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மலர் தூவினர்

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'குறுவை சாகுபடிக்காக காலிங்கராயன் வாய்க்காலில் வருகிற அக்டோபர் 13-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். தற்போது 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. படிப்படியாக 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படும். பருவமழையின் பொழிவை பொறுத்து தண்ணீர் திறப்பின் அளவு மாறுபடும்' என்றனர்.

முன்னதாக காலிங்கராயன் தடுப்பணையில் இருந்து வாய்க்காலில் திறந்துவிடப்பட்ட தண்ணீருக்கு காலிங்கராயன் பாசன சபை மற்றும் விவசாய சங்கத்தினர் மலர் தூவி வணங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்