விலையில்லா வேட்டி-சேலை உற்பத்திக்குவெளி மார்க்கெட்டில் நூல் கொள்முதல்விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை
விலையில்லா வேட்டி-சேலை உற்பத்திக்கு வெளி மார்க்கெட்டில் நூல் கொள்முதல் செய்யவேண்டும் என்று விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விலையில்லா வேட்டி-சேலை உற்பத்திக்கு தேவையான நூல் வெளி மார்க்கெட்டில் இருந்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வேட்டி-சேலை உற்பத்தி
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி 1 கோடியே 63 லட்சம் வேட்டியும், ஒரு கோடியே 68 லட்சம் சேலையும் கைத்தறிகள், விசைத்தறிகள் மூலமாக உற்பத்தி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு தேவையான நூல் உற்பத்திக்கான ஏலம் கடந்த 2-ந் தேதி நடந்தது. அப்போது ஒப்பந்ததாரர்கள் முன்வைத்த ஏலத்தொகையை அதிகாரிகள் ஏற்கவில்லை. தொடர்ந்து இந்த ஏலம் தொடர்பான இழுபறி இருந்து வருவதால் விலையில்லா வேட்டி-சேலை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே வெளிமார்க்கெட்டில் நூல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது:-
காலதாமதம்
ஆகஸ்டு மாதம் 5-ந் தேதிக்கு முன்பே நூலுக்கான ஏலம் இறுதி செய்யப்பட்டு, நூல் வினியோகம் செய்யப்படும் என்றும், 8-ந் தேதி வேட்டி-சேலை உற்பத்தி தொடங்கப்படும் என்றும் கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால் நூல் உற்பத்தி ஏலத்துக்கான இழுபறி நீடித்து வருவதால், விலையில்லா வேட்டி-சேலை உற்பத்தியை தொடங்க பல வாரங்கள் காலதாமதம் ஏற்படலாம்.
கடந்த 2001-ம் ஆண்டு முதல் இதுபோன்ற சூழ்நிலையின்போது 15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை தேவைக்கான நூல் வெளி மார்க்கெட்டில் அரசு ஏற்கும் விலையில் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் வேட்டிக்கான காட்டன் நூல் 3 ஆயிரத்து 400 பை (வார்ப்) கூட்டுறவு நூற்பாலை மூலமாக கைத்தறி துறை பெற்று மாவட்ட வாரியாக அனுப்பி உள்ளது. இந்த நூல் மட்டும் வந்தால் வேட்டி உற்பத்தியை செய்ய முடியாது. பார்டருக்கான நூலும் வழங்கப்பட வேண்டும். இந்த பணிகள் தொடங்கப்படாததால் விசைத்தறியாளர்கள் வேலையின்றி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நூல் வினியோகம்
இதுகுறித்து ஈரோடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் சரவணன் கூறுகையில், ''விலையில்லா வேட்டி-சேலைக்கான ஏலம் கோரப்பட்டு உள்ளது. வேட்டிக்கான தலா 50 கிலோ கொண்ட 300 பைகள் நூல் விரைவில் விசைத்தறி கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கங்களுக்கு வழங்கப்பட உள்ளது. மற்ற நூல் விரைவில் வந்தவுடன் வழங்கப்படும்", என்றார்.