அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீட் மாதிரி தேர்வு
மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை நடத்திய அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலையில் நேற்று மாதிரி தேர்வு நடத்தப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை நடத்திய அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலையில் நேற்று மாதிரி தேர்வு நடத்தப்பட்டது.
நீட் தேர்வுக்கான பயிற்சி
மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 2019-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. 2018-ம் ஆண்டு மதுரை, தேனி, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் இணைந்து நடத்தின. 2019-ம் ஆண்டு முதல் மதுரை மாவட்டத்துக்கு தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சி வகுப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த பயிற்சியில் ஆர்வமுடன் பங்கேற்க தொடங்கினர். ஆனால், கொரோனா ஊரடங்கால் இந்த பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன. இந்த கல்வியாண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஆன்லைன் பயிற்சி பெற்றனர். அதேபோல, வாரஇறுதி வகுப்புகளில் நேரடியாக நடந்த பயிற்சி வகுப்புகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாதிரி தேர்வு
இந்த வகுப்புகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்தன. இதற்காக மதுரை மாவட்டத்தில் 8 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதேபோல, ஆன்லைனில் காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. அத்துடன் அதிகாலை 5.30 மணி முதல் காலை 10 மணி வரை 20 தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், நீட் தேர்வுக்கான மாதிரி தேர்வு 720 மதிப்பெண்ணுக்கு நேற்று மதுரையில் நடந்தது.
தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடந்தது. இந்த தேர்வில் 200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஏற்கனவே, கடந்த 4 வருடங்களாக பள்ளிக்கல்வித்துறை நடத்திய பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு நீட் தேர்வு எழுதி எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளில் சுமார் 40 மாணவ, மாணவிகள் 7.5 சதவீத அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு பிரிவில் சேர்க்கை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராட்டு
நேற்று நடந்த தேர்வுகளை மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் வெண்ணிலா தேவி, செல்வன் அற்புதராஜ், மோசஸ், ராபியா பசிரியா ஆகியோர் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். தேர்வுகள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலையில் நடத்தப்பட்டன. மாதிரி தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்த மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு முதன்மைக்கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்தார். முதன்மைக்கல்வி அலுவலரின் வருகையின் போது நேர்முக உதவியாளர் கந்தசாமி உடன் இருந்தார்.