மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2022-12-05 22:32 GMT

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

சிறப்பு பயிற்றுனர்கள்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

பள்ளி கல்வித்துறையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளாக சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள், பள்ளி ஆயத்த மைய ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் என 47 பேர் பணியாற்றி வருகிறோம். தற்போது, ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் எங்களைப்போல் பணியாற்றி வருபவர்களுக்கு 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை ஒரே திட்டத்தில் பணியாற்றி வரும் எங்களுக்கு இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, எங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு வழங்கவும், பணி நியமன ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

ஒற்றுமை

மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், 'பவானி அருகே உள்ள சலங்கபாளையம் கிராமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கிராவல் மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

மொடக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், 'எங்கள் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 30 சதவீதம் பேரும், உயர்சாதி வகுப்பினர் 70 சதவீதம் பேரும் வசித்து வருகிறோம். காலம் காலமாக நாங்கள் சாதி பாகுபாடின்றி ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில், கடந்த மாதம் 24-ந்தேதி, மொடக்குறிச்சி பேரூராட்சி கவுன்சிலர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கவுன்சிலர் சத்யாதேவியின் கணவர் சிவசங்கர் என்பவர் மீது சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்குள் உள்ள அதிகார போட்டியால் இதுபோன்ற பொய் வழக்குகள் எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும், சாதி ஒற்றுமை குலைக்கும் வகையிலும் உள்ளது. எனவே, இந்த வழக்கு சம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

கோசாலை

தமிழ் புலிகள் கட்சி ஈரோடு மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் மற்றும் நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் அம்பேத்கர், கிழக்கு மாவட்ட நிர்வாகி சாதிக் மற்றும் நிர்வாகிகள் தனித்தனியாக கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

பெருந்துறை விஜயமங்கலம் அருகே உள்ள வீரசங்கிலி பகுதியில் தனியார் ஒருவர் அரசு அங்கீகாரம் பெறாமல் கோசாலை நடத்தி வருகிறார். இவர், பெருந்துறை நெடுஞ்சாலையில், மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களை மறித்து, தன்னுடைய கோசாலைக்கு அவற்றை கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதற்கு மறுப்பவர்கள் மீது சட்ட விரோதமாக மாடுகளை கடத்துவதாகவும் கூறி மிரட்டுவதுடன், பணம் கேட்டும் மிரட்டி வருகிறார். இதனால் சிறுபான்மையின வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, அவரிடம் உள்ள மாடுகளை மீட்டு, நியாயமான முறையில் செயல்பட்டு வரும் வேறு கோசாலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

181 மனுக்கள்

அந்தியூர் அருகே உள்ள கொண்டையம்பாளையம் பகுதியை சேர்ந்த ராக்கியம்மாள் என்பவர் கொடுத்திருந்த மனுவில், 'எங்களுக்கு சொந்தமாக நகலூர் கிராமம் வீரனூரில் 2 வீடுகளும் நகலூர் கிராமத்தில் 1.29 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது. எனது கணவர் இறந்து விட்ட நிலையில், அவருடைய உறவினர்கள் வீடுகளும், நிலமும் தங்களுக்கே சொந்தம் என தகராறு செய்து வருகின்றனர். எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி எங்களுக்கு வீடு மற்றும் நிலம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

இதேபோல் மொத்தம் 181 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அதை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்