மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்குதண்ணீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-01-16 20:40 GMT

மேட்டூர், 

மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பை பொறுத்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது முன்கூட்டியே அல்லது காலதாமதமாக திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு அணையின் நீர் திருப்திகரமாக இருந்ததால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக (ஜூலை 16-ந் தேதி) மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

இவ்வாறு தண்ணீர் தொடர்ந்து 137 நாட்களுக்கு திறந்து விடப்படும். இதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும். இருப்பினும் கால்வாய் பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நேற்று முன்தினம் (15-ந் தேதி) வரை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

அதன்படி கால்வாய் பாசனத்தில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை கால்வாய் பாசன தேவைக்காக 8.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 110.19 அடியாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்