கயத்தாறு அருகே குளிப்பதற்கு கிணற்றில் குதித்த வங்கி ஊழியர் தலையில் அடிபட்டு பரிதாப சாவு
கயத்தாறு அருகே குளிப்பதற்கு கிணற்றில் குதித்த வங்கி ஊழியர் தலையில் அடிபட்டு பரிதாபமாக பலியானார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே நண்பர்களுடன் தீபாவளி கொண்டாடுவதற்கு வந்த சென்னை வங்கி ஊழியர் குளிப்பதற்கு கிணற்றில் குதித்தபோது தலையில் அடிபட்டு பரிதாபமாக பலியானார்.
வங்கி ஊழியர்
சென்னை திருவள்ளுவர் மாவட்டத்தைச் பெரும்பூர் பகுதியில் வசித்து வருபவர் ஞானபிரகாசம். இவரது மகன் மோகன்தாஸ் (வயது 23). இவர் சென்னையில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்தார். இதே வங்கியில் கயத்தாறு அருகே உள்ள சிவஞானபுரம் சவுந்திரராஜன் என்பவரது மகன் ராம் பிரசாத் என்பவரும் அவருடன் வேலை செய்து வருகிறார். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து 4 நண்பர்களுடன் மோகன்தாஸ், ராம்பிரசாத் வீட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் காலை 8மணிக்கு பொன்ராஜ் என்பவரின் கிணற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க மோகன்தாஸ் சென்றுள்ளார். அப்போது கிணற்றின் மேலிருந்து அவர் தலைகீழாக குதித்தாராம்.
தண்ணீரில் மூழ்கினார்
இதில் எதிர்பாராதவிதமாக கிணற்றின் சுவற்றில் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் தண்ணீரில் மூழ்கியுள்ளார். பதறிப்போன நண்பர்கள் கூச்சலிட்டதை கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். ்்அதற்குள் மோகன்தாஸ் கிணற்றிலிருந்து மீட்கமுடியவில்லையாம். இதுகுறித்த தகவல் அறிந்த கயத்தாறு போலீசாரும், கோவில்பட்டி தீயணைப்பு துறை வீரர்களும் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் தண்ணீரில் மூழ்கிய மோகன்தாஸ் பரிதாபமாக மூழ்கி பிணமாக கிடந்துள்ளார். அவரை உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு மேலே கொண்டு வந்துள்ளனர்.
போலீசார் விசாரணை
கயத்தாறு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தீபாவளி பண்டிகை கொண்டாட நண்பர்களுடன் வந்த வங்கி ஊழியர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.