கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கு2¼ லட்சம் விண்ணப்ப படிவங்கள் தேனி வருகை
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்காக 2½ லட்சம் விண்ணப்ப படிவங்கள் தேனிக்கு வந்தன.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் வருகிற 20-ந் தேதி முதல் வினியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு வெளியிட்டது.
இதில் விண்ணப்பதாரரின் பெயர், திருமண நிலை, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், வாடகை வீடா அல்லது சொந்த வீடா என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இந்த விண்ணப்பங்களை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அரசு அனுப்பி வைத்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்துக்கு நேற்று 2 லட்சத்து 30 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் கொண்டு வரப்பட்டன. அவை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து ஆகியோர் முன்னிலையில் இறக்கி வைக்கப்பட்டன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'மாவட்டத்தில் சுமார் 4½ லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்களில் 2 கட்டமாக முகாம்கள் நடத்தப்பட உள்ளன. 20-ந்தேதி முதல் வீடு வீடாக விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும்' என்றனர்.