கட்டணமில்லா பயண அட்டைக்காக13,828 விண்ணப்பங்கள்
கட்டணமில்லா பயண அட்டைக்காக 13,828 விண்ணப்பங்கள்
நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் இருந்து கட்டணமில்லா பயண அட்டைக்காக 13,828 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என்று போக்குவரத்து கழக நாகை மண்டல துணை மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
கட்டணமில்லா பயண அட்டை
நாகை கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கான கட்டணம் இல்லா பயண அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அரசு போக்குவரத்துக்கழக நாகை மண்டல துணைமேலாளர் (வணிகம்) சிதம்பரகுமார் தலைமை தாங்கி, மாணவ - மாணவிகளுக்கு பயண அட்டைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு சார்பில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எந்த வித சிரமமும் இன்றி பள்ளிக்கு சென்று வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
13,828 விண்ணப்பங்கள்
அதன்படி நாகை மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவ- மாணவிகளுக்கான கட்டணமில்லா பயண அட்டை வழங்குவதற்கு இதுநாள் வரை 13,828 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 205 மாணவ- மாணவிகளுக்கு அரசு பஸ்களில் கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் மண்டல கிளைமேலாளர் நடராஜன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பாலு உள்பட படம் பலர் கலந்து கொண்டனர்.