ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை-தென்காசி கோர்ட்டு தீர்ப்பு
சுரண்டை அருகே பெண்ணை அடித்துக் கொன்ற வழக்கில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சுரண்டை அருகே பெண்ணை அடித்துக் கொன்ற வழக்கில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
அக்காள்-தங்கை
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீராணம் ராஜா தோட்டம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மனைவி பேச்சியம்மாள். இவரது உடன்பிறந்த தங்கை கருத்தாத்தாள் (வயது 60).
இவர் பேச்சியம்மாளிடம் ஒரு வீட்டை தனது பெயரில் எழுதி தருமாறு கேட்டார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
தாக்குதல்
கடந்த 24-8-2014 அன்று கருப்பசாமி மதுரைக்கு சென்று விட்டார். இதையடுத்து பேச்சியம்மாள் வீட்டிற்கு கருத்தாத்தாள் அவரது கணவர் பிச்சையா, மகன் துரை முத்து (44), மகள் மாரி என்ற மாரியம்மாள் (40) ஆகியோர் சென்றனர்.
பின்னர் 4 பேரும் தங்களது வீட்டிற்கு பேச்சியம்மாளை அழைத்து வந்து, வீட்டை எழுதி தருமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் அவர் மறுக்கவே 4 பேரும் சேர்ந்து பேச்சியம்மாளை சரமாரியாக தாக்கினர்.
கொலை வழக்கு
மறுநாள் காலையில் அங்கு வந்த கருப்பசாமி தனது மனைவி காயம் அடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அதன்பின்னர் பேச்சியம்மாளை வீட்டிற்கு அழைத்து வரும்போது, அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு விசாரணை தென்காசி கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை நடந்தபோதே பிச்சையா இறந்துவிட்டார்.
நேற்று இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட நீதிபதி அனுராதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், குற்றம்சாட்டப்பட்ட கருத்தாத்தாள், துரைமுத்து, மாரியம்மாள் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரமும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் வேலுச்சாமி ஆஜரானார்.