2,609 மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,609 மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

Update: 2023-07-27 18:48 GMT

விலையில்லா சைக்கிள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 63 மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ்-1 பயின்ற 9,685 மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படவுள்ளது. அதில் முதற்கட்டமாக ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள 16 மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 2,609 மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தனியார் பள்ளிகளுக்கு இணையாக

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளி மாணவ- மாணவிகளும் கல்வி பயின்று எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், இல்லம் தேடிக் கல்வி, கல்லூரிக் கனவு, புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார்.

பேராசிரியர் அன்பழகன் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டிப்போட்டு இயங்கி வருகிறது. ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகள் எண்ணிக்கை கடந்த காலங்களில் குறைந்து விட்டது. பள்ளி கல்வித் துறையில் பல்வேறு புதிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதால் தற்போது 825 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். வரும் காலங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இப்பள்ளியின் வளர்ச்சிக்கு நான் உறுதுணையாக இருப்பேன்.

தன்னம்பிக்கையோடு...

மாணவ- மாணவிகள் தங்கள் விருப்பப்படி ஆர்வமுள்ள பாடத்திட்டங்களை தேர்வு செய்து தன்னம்பிக்கையோடு படித்து எதிர்காலத்தில் சிறந்தவர்களாக விளங்கிட வேண்டும். இந்த குறிக்கோளை மனதில் வைத்து விடாமுயற்சியுடன் படித்து வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஆற்காடு எம்.எல்.ஏ. ஜெ.எல்.ஈஸ்வரப்பன், முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ரஹமத், நகரமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்